நாட்டில் பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் இருபாலாரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், பதின்மவயது சிறுமிகள் தாயாக மாறும் நிலையானது ஒரு தீவிரமான சமூக மற்றும் சட்டப் பிரச்சினையாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் மாத்திரம் 10 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, கடந்த வருடத்தில் மாத்திரம் 2000 பதின்மவயது தாய்மார்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்கு பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அதனை தடுக்கும் முறைகள் குறித்த அறிவை அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.