சட்டவிரோத குடியேற்றம் ஐரோப்பிய நாடுகளை நாசமாக்கி விடும் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த பொருளாதார குற்றவாளிகள், வறுமை உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட அகதிகள் உள்பட பலரும் இங்கிலாந்து, இத்தாலி போன்ற வௌிநாடுகளில் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர்.
இதனால் அந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதையடுத்து சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறுபவர்களை தடுக்க இங்கிலாந்து, இத்தாலி நாடுகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்நிலையில் இத்தாலி சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரிஷி சுனக், “சட்டவிரோத குடியேற்றம் ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
இந்த சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவில்லை என்றால் ஐரோப்பிய நாடுகளை நாசமாக்கி விடும்.
சட்டவிரோதமாக படகுகளில் வரும் அகதிகளின் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே இருக்கும். இதற்கு தீர்வு காண சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.