பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி சட்டத்தரணிகள் சிலர் இந்த வழக்கை தாக்கல் செய்ய தயாராகி வருகின்றனர்.
சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட ஒருவருக்கு இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம்,தேசபந்து தென்னகோனுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளதால், பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவியான பொலிஸ் மா அதிபர் பதவியை வகிக்க அவருக்கு சட்டரீதியாக தகுதியில்லை இந்த சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில்,போதைப் பொருள் விற்பனைக்கு எதிராக நாடு முழுவதும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், போதைப் பொருள் கடத்தல்கார்களை நம்பி வாழும் சட்டத்தரணிகள் சிலர் சதித்திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.
முன்னணி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் சார்பில் பெயர் பெற்ற முன்னணி சட்டத்தரணிகளே நீதிமன்றங்களில் முன்னிலையாகி வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
போதைப் பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் 2 ஆயிரத்து 121 பேரை பொலிஸாரும், அதிரடிப்படையினரும் கைது செய்துள்ளனர்.