2001 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவில் உள்ள ஜோதிடர் ஒருவரிடம் சென்றதாகவும் அந்த ஜோதிடர் ராஜபக்சவினரை அழிக்கும் ராஜபக்ச ஒருவரை பற்றி எதிர்வுகூறியதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்ட மகளிர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“ மகிந்த ராஜபக்சவுடன் அவரது ஜாதகத்தை கணிக்க 2001 ஆம் ஆண்டு நான் இந்தியாவில் உள்ள ஜோதிடர் ஒருவரிடம் சென்றேன். இதனை மகிந்த ராஜபக்சவிடமும் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
அந்த ஜோதிடர் மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்தை பார்த்து, உங்களது குடும்பத்தில் இருந்து வரும் ஒருவர், உங்களது பரம்பரையின் புகழை அழித்து விடுவார் என கூறினார்.
அவர் கூறியது கோட்டாபய ராஜபக்ச பற்றி அல்ல பசில் ராஜபக்சவை பற்றியே கூறினார்.
பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் பசில் ராஜபக்ச மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தார். கல்லெறிந்து தாக்கினால், நாய் ஓடிவிடுமாம், சிங்கம் எதிர்த்து நிற்குமாம்.அவர்கள் மீது கல்லெறிய வேண்டாமாம்.வந்ததும் பார்த்துக்கொள்வார்களாம்.
பசில் ராஜபக்ச இலங்கை மக்களை மிரட்டியுள்ளார். இலங்கை மக்கள் யார் அச்சுறுத்தினாலும் மிரட்டினாலும் அதற்கு அஞ்சுபவர்கள் அல்ல.
இதனால்,தேர்தலை நடத்துங்கள், தேர்தல் நடைபெறும் போது நாய் யார், சிங்கம் யார் என்பது அறிந்துக்கொள்ளலாம்” என சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.