இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் கோபால் பாக்லே, நேற்று டிசம்பர் 15ஆம் திகதியுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவிக்கு விடைக்கொடுத்துள்ளார்.
அவர் அவுஸ்ரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே 2020ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக தமது கடமைகளை பொறுப்பேற்று கடந்த இரண்டரை வருடங்களாக அந்த பதவியில் தொடர்ந்தார்.
மகத்தான பணியை ஆற்றிய கோபால் பாக்லே
இந்த காலப்பகுதியில் இந்தியாவின் உயர்மட்ட இராஜதந்திரியாக செயல்பட்ட அவர் இருநாட்டு கூட்டுறவில் பல ஒப்பிடமுடியாத மைல்கற்களை அடைய செயல்பட்டிருந்தார்.
இந்தியா-இலங்கை உறவுகளில் பல மகுட சாதனைகளை நிகழ்த்துவதில் முக்கிய பங்காற்றியவராக உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இருந்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
2022 இல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் இருந்து விடுபட 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பல்நோக்கு உதவியை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே முக்கிய பங்கை வகித்திருந்தார்.
கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 25 தொன்களுக்கும் அதிகமான மருந்துகள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள், ரேபிட் ஆன்டிஜென் சோதனை கருவிகள், திரவ மருத்துவகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதிலும் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சிறப்பான பணியை ஆற்றியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.
இந்த காலகட்டத்தில் இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை விரைவுபடுத்துவதற்காக இந்திய கடற்படை மற்றும் விமானப்படையின் உதவிகளும் கிடைக்கப்பெற்றது. இதனை ஒருங்கிணைத்தில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே முக்கிய பங்கை வகித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஈடுபாடுகள் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் பதவிக்காலத்தில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ஒத்துழைப்பு, மின்சார இணைப்பு, திருகோணமலையின் வளர்ச்சி, நில இணைப்பு, இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்தல் உட்பட பல்வேறு திட்டங்களை ஏற்படுத்துவதற்காகவும் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பாரிய பணியை ஆற்றியுள்ளார்.
புதிய உயர்ஸ்தானிகரைாக பதவியேற்கும் ஸ்ரீ சந்தோஷ் ஜா
இலங்கையில் இருந்து புனித புத்தகயாவுக்கான ஆன்மீக பயணங்களுக்கான விமான சேவைகளை அதிகரித்தமை, சென்னை-யாழ்ப்பாண விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டமை மற்றும் இருநாட்டு படகுச் சேவைகளை மீண்டும் ஆரம்பித்தமை போன்ற பல்வேறு பரிமாணங்களின் இவரது பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா பொறுப்பேற்க உள்ளார்.
ஸ்ரீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்திய தூதராக பணியாற்றி வருகிறார்.
ஸ்ரீ சந்தோஷ் ஜா 2007-2010 காலகட்டத்தில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.