இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா மகளிர் அணி வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த சாதனையை இந்திய மகளிர் அணி படைத்துள்ளது.
மும்பையில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகிய டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா மகளிர் அணி, முதல் இன்னிங்ஸில் 428 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் கடும் தடுமாற்றத்தை சந்தித்தது. நேட் ஸ்கீவா் மாத்திரமே அதிகபட்சமாக 59 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இங்கிலாந்து மகளிர் அணி 136க்கு ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது.
2ஆவது இன்னிங்ஸில் இந்தியா மகளிா் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
478 என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 131 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் 347 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளார்கள்.
டி20யில் 2-1 என இங்கிலாந்து வெற்றி பெற ஒரே டெஸ்ட் போட்டியில் மிகப் பெரிய வெற்றியை பெற்று கிண்ணத்தை வென்றுள்ளது இந்திய மகளிர் அணி.
சொந்த மண்ணில் இந்திய மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணியை டெஸ்டில் வீழ்த்தியுள்ளமை அணிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என அணியின் தெரிவுக்குழு வாழ்த்துகளை கூறியுள்ளது. அத்துடன், இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.