தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள ஓமானில் இருந்து வந்த லெபனான் வர்த்தகரின் பணத்தை கொள்ளையிட்ட சீனப் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று காலை இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், விமானத்திற்குள் லெபனான் வர்த்தகருக்கு சொந்தமான 14 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொள்ளையிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 13 ஆம் திகதி லெபனான் வர்த்தகர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விமான நிலைய பொலிஸார், விமான நிலைய சுற்றுலாப் பொலிஸார் கூட்டாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில், சந்தேக நபரான சீனப் பிரஜை, இன்று அதிகாலை 1.20 அளவில் எயர் இந்தியா விமானம் மூலம் சென்னை செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சீனப் பிரஜையிடம் இருந்து 8 லட்சத்து 27 ஆயிரத்து 712 ரூபா பொறுமதியான உலக நாடுகளில் நாணயங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தான் உலக முழுவதும் தேயிலை விற்பனையில் ஈடுபடும் விற்பனையாளர் எனவும் இந்த பணம் அதில் சம்பாதித்து எனவும் சீனப் பிரஜை கூறியுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வரும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார்,நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர்.