இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக, பொருளாதார அபிலாஷைகளுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பை தெரிவிக்கும் யோசனையொன்று அமெரிக்க செனட் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த யோசனை அந்நாட்டின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க செனட் சபை உறுப்பினரான பென் காடின் , செனட் சபையின் சர்வதேசத் தொடர்புகள் பற்றிய குழுவின் தலைவரும் தரப்படுத்தல் உறுப்பினருமான ஜிம் ரீஷ், அதன் பிரதிநிதியான ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பில் ஜோன்சன் ஆகியோரால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த யோசனையில், “ஊழலுக்கு தீர்வு காணவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும், சுதந்திரமான மற்றும் நியாயமான உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை தொடர்ந்தும் தாமதிக்காது நடத்துவதன் மூலம் இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு செவிசாய்க்கவும் அதற்கு மதிப்பளிக்கவும் வேண்டும்” என அரசாங்கத்தை வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பேரழிவு மிக்க மனித உரிமைகள் சார் அழுத்தத்தை ஏற்படுத்திய அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள், அரசாங்கத்தின் ஊழல், நிதி முறைகேடு, சட்டவாட்சியின் தோல்வி மற்றும் சீன மக்கள் குடியரசு மற்றும் அதனுடன் தொடர்புடைய கொள்ளையடிக்கும் கடனுதவி ஆகிய காரணிகளினால் இலங்கை மக்களின் நெருக்கடி மோசமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.