ஓமான் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வணிக வகுப்பில் பயணித்த லெபனான் பிரஜையின் கைப்பையில் இருந்த 50 லட்சம் ரூபா பெறுமதியான 14 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொள்ளையிட்ட சீனப் பிரஜையை கைது செய்வதற்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் சுற்றுலாப் பொலிஸார் இணைந்து நேற்றிவு கூட்டு தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
47 வயதான லெபனான் பிரஜையான வர்த்தகர் தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக நேற்று காலை 7.20 அளவில் மஸ்கட்டில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இந்த வர்த்தகர் விமானத்தில் வணிக வகுப்பில் பயணித்துள்ளதுடன் அவருடன் சீனப் பிரஜை உட்பட மேலும் மூன்று பேரும் அதே விமான நிலையத்தில் வந்துள்ளனர்.
லெபனான் பிரஜை தனது கைப்பையை விமானத்தில் பயணிகள் இருக்கைக்கு மேலே இருக்கும் பொதிகள் வைக்கும் இடத்தில் வைத்துள்ளார்.
இந்த விமானம் இரவு நேரத்தில் பயணித்துள்ளதுடன் விமானத்திற்குள் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு பயணிகள் நித்திரை கொள்வதற்கான வசதி செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது சீனப் பிரஜை, லெபனான் வர்த்தகரின் கைப்பையை திறந்து அதில் இருந்த 14 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொள்ளையிட்டுள்ளதுடன் அதற்கு பதிலாக 5 எகிப்து பவுண்ட் பெறுமதியான 18 கட்டுகளை பைக்குள் வைத்துள்ளார்.
இதனை அறியாத லெபனான் பிரஜை, விமானத்தில் இருந்து இறங்கி, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் உள்ள வங்கியில் டொலர்களை மாற்ற சென்றுள்ளார்.
எனினும் பையில் இருந்த 14 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளதை கண்டு, அது குறித்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மற்றும் சுற்றுலாப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில் அமெரிக்க டொலர்களுடன் காணாமல் போன சீனப் பிரஜையை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.