மலையக மக்களின் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்ய திட்டம்

மலையக மக்களின் பொதுக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்து அம்மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காலனித்துவ ஆட்சியின் போது ஏற்பட்ட பின்னடைவுகள் உட்பட பல்வேறு காரணங்களினால் மலையகப் பகுதிகளில் பொது உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் வளர்ச்சி ஏற்படவில்லை. எனவே, அதனை நிவர்த்திக்கும் முகமாக மலையக தசாப்தம் எனப்படும் பத்தாண்டு கால கிராமப்புற மற்றும் சமூக மேம்பாட்டு வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மலையகப் பிரதேசங்களில் பெரும்பான்மையினராக தமிழர்களே வாழ்கின்றனர். வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதார அபிவிருத்தி கிராமப்புற அபிவிருத்தி மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்களை ஒன்றிணைத்து மேற்கொள்வதன் மூலம் அப்பிரதேச மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு விரைவான மற்றும் திட்டமிடப்பட்ட அணுகுமுறையை அரசாங்கம் மேற்கொள்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

அதன்படி, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மலையக தசாப்தத்தின் பத்தாண்டு பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்திற்காக அடுத்த ஆண்டு (2024) 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை மற்றும் குருநாகல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள 89 பிரதேச செயலகப் பிரிவுகளில் மலையக தசாப்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுக்கு திட்டத் தேர்வு அளவுகோல் மற்றும் செயல்பாட்டு மாதிரி குறித்து தெரிவிக்கப்படும்.

இத்திட்டத்திற்கான பிரதேச மற்றும் மாவட்ட குழுக்களின் இணக்கப்பாடு கிடைத்தவுடன் மாவட்ட செயலாளர்களின் பூரண ஈடுபாட்டுடனும் ஏனைய அரச நிறுவனங்களுடனும் மற்றும் பிரதேச அலுவலகத்தின் பூரண ஆதரவுடனும் கூட்டு வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.

2005 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மலையக அபிவிருத்தி அதிகார சபையானது மலையக பிரதேசங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. ஆனால் பின்னர் இலங்கை மலையக அபிவிருத்தி அதிகார சபையானது 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திவினகும அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைக்கப்பட்டது.

அதனால், மலையகம் உள்ளிட்ட மேட்டு நிலப் பகுதிகளின் வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டது.அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மலையக தசாப்த திட்டத்தின் ஊடாக மலையக அபிவிருத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை தீர்க்க முடியும்” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin