சீனாவில் பனிப்புயல்: 100 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன

சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் சில பகுதிகளில் ஒரே வாரத்தில் இரண்டாவது தடவையாக கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவி வரும் சூழலில்,அங்குள்ள பாடசாலைகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை இடங்கள் உட்பட அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன.

பெய்ஜிங் மற்றும் சீனாவின் வடமேற்கு சின்ஜியாங்கில் கடும் பனிப்பொழிவு மற்றும் காற்று வீசி வருவதால் பல தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பெய்ஜிங்கின் தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் 5 முதல் 15 சென்றி மீட்டர் வரையும், சில இடங்களில் 20 சென்றி மீட்டர் வரை பனி இருக்கக்கூடும் எனவும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை பனிப்புயல் தொடரும் எனவும் சீன வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்கள் முழுவதும் மொத்தம் 100 நெடுஞ்சாலைகள், ஏனைய வீதிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளைப் பனிப்புயல் தாக்கியுள்ளதுடன் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவைத் தொடர்ந்து கடும் குளிருடன் கூடிய நிலவும் எனவும் இந்த வாரம் முழுவதும் சீனாவின் வடக்கு பகுதிகளில் வெப்பநிலை குறையும் எனவும் சீன வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Recommended For You

About the Author: admin