இலங்கையின் முதன்மையான தனியார் வங்கி ஒன்றின் முன்னாள் அதிகாரிகள் ஐவருக்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, லக்னா ஜயசேகர (முதல் அதிகாரி), தனுஜா முத்துக்குமரன (முன்னாள் முகாமையாளர்), அருண ஜினதாச (முன்னாள் பிராந்திய முகாமையாளர்), கயானி விதானபத்திரனகே (கிளார்க்) மற்றும் ஹிரந்த கொடிகார (கிளை கடன் அதிகாரி) ஆகிய ஐந்து அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.
குறித்த வங்கியின் தலஹேன கிளையில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பிலேயே இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுப் பெற்ற பாரம்பரிய வைத்தியரான கெலும் ஹர்ஷ கமால் வீரசிங்கவின் வங்கி கணக்கில் இருந்து அனுமதியின்றி 77.98 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து கணக்கு உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்த நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடுவெல நீதவான் நீதிமன்றில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர்.
இதனையடுத்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 124 மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டத்தின் பிரிவு 51(b), (1) ஆகியவற்றின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கையை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை நேற்று பிறப்பித்திருந்தது.
ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, சட்டத்தரணி சசிந்த ரொட்ரிகோ ஆகியோர் முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.