ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதியான அலெக்ஸி நவல்னியை காணவில்லை என அவருடைய கூட்டாளிகள் தெரிவத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொஸ்கோவின் கிழக்கே உள்ள விளாடிமிர் பகுதியில் உள்ள IK-6 தண்டனைக் காலனியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரை காணவில்லை எனவும் அவர் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் அவரின் கூட்டாளிகள் கூறினர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு 19 ஆண்டுகள் கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி கடந்த 2013ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மொஸ்கோ நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தொடர்ந்து மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய குற்றங்களுக்காக அலெக்ஸி நவல்னிக்கு ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாஸ்கோ நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட பிற வழக்குகளான தீவிரவாதத்தை தூண்டுதல் மற்றும் நிதியளித்தல், சட்டவிரோத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை உருவாக்குதல், நாஜிக் கொள்கைகளுக்கு புத்துயிர் கொடுத்தல் மற்றும் ஆபத்தான செயல்களுக்கு குழந்தைகளை தூண்டுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் அவருக்கு கூடுதலாக 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மொத்தம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையிலேயே, மொஸ்கோவின் கிழக்கே உள்ள விளாடிமிர் பகுதியில் உள்ள IK-6 தண்டனைக் காலனியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரை காணவில்லை எனவும் அவர் தற்போது இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் அவரின் கூட்டாளிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து அலெக்ஸி நவல்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் கூறுகையில்,
மெலெகோவோ நகரத்தில் உள்ள IK-6 தண்டனைக் காலனியில் உள்ள ஊழியர்கள் எதிர்க்கட்சித் தலைவர் இப்போது அங்கு இல்லை என்று அவரது சட்டத்தரணியிடம் கூறியதாகக் குறிப்பிட்டுளு்ளார்.
“அவரை எங்கு அழைத்துச் சென்றார்கள் என்று கூறி அதிகாரிகள் மறுக்கிறார்கள்,” என்று கிரா யர்மிஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் வாக்னர் கூலிப்படையின் தலைவராகவும் இருந்து எவ்கேனி பிரிகோசின் அரசாங்கத்திற்கு திடீர் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.
இதனால் புடின் பெரும் அதிர்ச்சியில் இருந்த நிலையில், பின்னர் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து கிளர்ச்சியை கைவிட்டார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் இடம்பெற்ற இரண்டு மாதங்களில் வ்கேனி பிரிகோசின் மர்மமான விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.