உலகப் பொருளாதாரம் இரண்டாம் பனிப்போரின் விளிம்பில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொலம்பியாவில் நேற்றைய தினம் ஆற்றிய உரையின் போது அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
உலகப் பொருளாதாரத்தில் சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற அதிகாரக் குழுக்களாக துண்டாடப்படுவது, உலகளாவிய உற்பத்தியை பாதிக்கும் என்பதுடன் டிரில்லியன் கணக்கான டொலர்களை அழிக்கக்கூடும்.
இந்த காரணிகள் அனைத்தும் “புதிய பனிப்போரை” ஏற்படுத்தக்கூடும் என்பதால், அடிப்படை இருதரப்பு வர்த்தகத்தில் தெளிவான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பனிப்போர் என்பது 1945 மற்றும் 1991 க்கு இடையில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் மற்றும் அந்தந்த நட்பு நாடுகளுக்கும் இடையிலான புவிசார் அரசியல் பதட்டத்தின் காலகட்டமாகும்.
“நாம் இரண்டாம் பனிப்போரில் இறங்கினால் பரஸ்பரம் உறுதிசெய்யப்பட்ட பொருளாதார அழிவை நாம் காண முடியாது. ஆனால் திறந்த வர்த்தகத்தின் ஆதாயங்களை நிர்மூலமாக்குவதை நாம் காணலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.
உலகப் பொருளாதாரம் இரண்டு பகுதிகளாகப் பிரிந்தால், இழப்புகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதம் முதல் ஏழு சதவீதத்தை எட்டும் என்று அவர் கூறினார்.
இவ்வாறு நடந்தால் இரண்டாம் பனிப்போர் ஏற்படக்கூடும் என எச்சரித்த அவர், பகிரப்பட்ட பொருளாதார முன்னுரிமைகளை நோக்கி வேலை செய்யுமாறு உலகத் தலைவர்களை வலியுறுத்தினார்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நிலவும் பதட்டங்கள் அதகரித்துள்ள நிலையில் கீதா கோபிநாத்தின் கருத்துகள் வெளியாகியுள்ளன.