பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், இஸ்ரேலியப் பிணைக்கைதிகள் உயிருடன் வெளியேற முடியாது என்று ஹமாஸ் குழு எச்சரித்திருந்த நிலையில் நேற்று காஸாவின் முக்கிய நகரில்இஸ்ரேல் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் அக்டோபர் 7ஆம் திகதியன்று இஸ்ரேல்மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையிலான பூசல் தொடங்கியது. அந்தத் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும் 240 பேர் பிணைபிடிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.
அதற்குப் பதிலடியாக, காஸாமீது இஸ்ரேல் இராணுவத் தாக்குதலை மேற்கொண்டது. அதில் குறைந்தது 17,000 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும் என ஹமாசின் கீழ் இயங்கும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
டிசம்பர் 11 ஆம் திகதியன்று இஸ்ரேல், கான் யூனிஸ் நகரைத் தாக்கியது. இதற்கிடையே, இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் சுரங்கப்பாதையைத் தேடிக்கொண்டிருந்த வீடு ஒன்றைத் தாங்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்ததாக இஸ்லாமிய ஜிஹாத் எனும் குழுவைச் சேர்ந்த பாலஸ்தீனப் போராளிகள் கூறியுள்ளனர்.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஏவுகணை பாய்ச்சப்பட்டதாகவும், காஸா நகரையும் கான் யூனிஸ் நகரையும் சுற்றிக் கடுமையான சண்டைகள் நடந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
காஸாவில் இன்னும் 137 பிணைக்கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேல் சிறைகளில் கிட்டத்தட்ட 7,000 பாலஸ்தீனர்கள் இருப்பதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.