2024 ஆம் ஆண்டில் நாட்டிற்கு ஐந்து மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரசாங்கத்தின் இலக்கு குறித்து இலங்கையின் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்களுக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் சுற்றுலாத்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த ‘Homestay’ திட்டத்தை தயாரிப்பதற்கான விடயம் கலந்துரையாடப்பட்டது.
குழுவில் உரையாற்றிய சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் அதிகாரிகள், ‘Homestay’ யோசனையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், செல்வந்த சுற்றுலாப் பயணிகளை எதிர்வரும் ஆண்டில் இலங்கைக்கு வரவழைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், அதிகளவான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் வகையில், இலங்கையின் பொதுச் சமூகம் அவ்வாறான உல்லாசப் பயணிகளை கௌரவமான முறையில் வரவேற்கத் தயாராக இருக்க வேண்டுமெனவும், அவர்களின் பணத்தை ஏமாற்றி பெறுவதற்கான முயற்சிகளை கைவிட வேண்டும் எனவும், குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், உள்ளூர் மட்டத்தில் சுற்றுலாத் தலங்களைக் கொண்ட இடங்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தயாரிப்பதன் முக்கியத்துவம் குறித்து குழு கவனம் செலுத்தியுள்ளது.
சுற்றுலா மற்றும் நில அமைச்சகத்தின் 2022 ஆண்டு அறிக்கை, சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் 2020 ஆண்டு அறிக்கை, தொழில்துறை அமைச்சின் 2022 ஆண்டு அறிக்கை மற்றும் 2022 ஆம் ஆண்டு நிறுவனங்களின் பதிவாளரின் ஆண்டு அறிக்கை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு ‘Homestay’ திட்டத்துக்கான பணிகளை ஆரம்பிக்கவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, அசோக் அபேசிங்க, சுதத் மஞ்சுள, மதுர விதானகே மற்றும் குணதிலக ராஜபக்ஷ ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.