கொழும்பு தமிழர்களை இலக்கு வைத்து பொலிஸ் பதிவு

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களை இலக்குவைத்து மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (11) உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்படி, கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, மோதரை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பொலிஸ் பதிவு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், விண்ணப்பங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் மாத்திரம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்படி, சபையில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் ;

நாட்டில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகியன அரச கரும மொழிகளாக காணப்படுகின்றன. இருப்பினும், சிங்கள மொழியில் மாத்திரம் விண்ணப்பங்கள் தரப்படுகிறது.

ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? யாருடைய பொலிஸ் அதிகாரம்.

இந்த நாட்டில் யுத்தம் இல்லை. யுத்தம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. யுத்தத்தை நிறைவு செய்துவிட்டதாக மஹிந்த ராஜபக்ஷ சபையில் அறிவித்தார்.

ஆகவே நாட்டில் யுத்தம் என்றவொன்று இல்லை. தீவிரவாதம் இல்லை. எதனால் பொலிஸ் பதிவு முன்னெடுக்கப்படுகிறது?

தேர்தல் காலத்தில் வீடுவீடாகச் சென்று துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதை போன்று பொலிஸார் விண்ணப்பங்களை பகிர்ந்தளிக்கின்றனர்.

ஆகவே, பொலிஸார் பொலிஸாரின் தொழிலை பாருங்கள். கிராம உத்தியோகத்தர்களின் வேலைகளை செய்யாதீர்கள். மக்களை அச்சமூட்டாதீர்கள்.

தனிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு . ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை வைத்து எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் என்பது யாவரும் அறிந்தது.

தமிழர்களிடையே மாத்திரம் தரவு பதிவுசெய்யப்படுகிறது. இதனை உடனடியாக நிறுத்துங்கள்.

அமைச்சரிடம் இது குறித்து வினவியபோது பதில் வழங்கவில்லை. ஆகவேதான் சபையில் கேள்வி எழுப்பவேண்டிய நிலை ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில், பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் உண்மைக்குப் புறம்பான விடயங்களை சபையில் முன்வைப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

மனோகணேசன் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிகையிலே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் தொடர்ந்து கருத்துரைக்கையில்;

”பொலிஸ் பதிவு குறித்து கடந்த முறையும் தெளிவுபடுத்தினேன். கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நூற்றுக்கு தொண்ணூறு வீதமான பதிவுகள் நிறைவடைந்துள்ளன. அதில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சுப் பொறுப்பை நான் கையேற்றது முதல் பதிவுகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு ஏதேனும் தவறை செய்துவிட்டு கொழும்பில் தலைமறைவாகி இருப்பாரானால் குறித்த நபரை அடையாளம் காணும்வகையில் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தனிநபர் தொடர்பில் தகவல் சேகரித்து வைக்கப்படுகிறது. இதில் தவறொன்றும் இல்லை.

தமிழர்களின் வீடுகளில் மாத்திரவு பதிவு மேற்கொள்ளப்படுவதாக தொடர்ந்தும் மனோ கணேசன் சபையில் கூறிவருகின்றார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

பாதுகாப்பு கருதி பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதனை ஒருபோதும் நிறுத்தமுடியாது” எனத் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin