இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனக் கைதிகள் விடுதலை செய்யப்படும்வரை பிணைக்கைதிகளை உயிரோடு விடுவிக்கும் சாத்தியம் இல்லை என்று ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் படையினர் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் இரு படையினரும் நேருக்கு நேர் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், “ஹமாசிடம் இன்னும் பலர் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஆனால் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத வரை எந்த பிணைக்கைதிகளும் உயிருடன் வெளியேற மாட்டார்கள். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தங்கள் பிணைக்கைதிகளை அவர்கள் உயிருடன் பிடிக்க முடியாது’ என ஹமாசின் ஆயுதப்பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு ஒபையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஸாவில் புதிய அமைதிப் பேச்சுக்கான வாய்ப்பு குறைந்து கொண்டிருக்கின்றது; கத்தார்
காஸாவில் இஸ்ரேலின் மூர்க்கமான தாக்குதல் தொடரும் வேளையில் புதிய அமைதிப் பேச்சுக்கான வாய்ப்பு சுருங்கிக் கொண்டிருப்பதாகக் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்-தானி (Sheikh Mohammed bin Abdulrahman al-Thani) தெரிவித்தார்.
இருதரப்புகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளைக் கத்தார் தொடரும் என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, “காஸாவில் முழு வீச்சில் போர் நடந்து கொண்டிருப்பதாகவும் அண்மை நாள்களில் ஹமாஸ் தீவிரவாதிகள் பலர் அவர்களின் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு இஸ்ரேலிடம் சரணடைந்திருப்பதாகவும், ஹமாஸ் தலைவருக்காக உயிரை இழக்காதீர்கள். சரணடையுங்கள்” என ஹமாஸ் அமைப்பினருக்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.