மொசாட் இலங்கையில் நெருக்கடியை உருவாக்க முயற்சி

இலங்கையில் மிக பாரதூரமான நெருக்கடியை உருவாக்கி ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கின்றதா ‘மொசாட்’ என ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் உறுப்பினரும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“இஸ்ரேல் – பலஸ்தீன் பிரச்சினையானது மிக பாரிய உலகின் நெருக்கடியாக தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இலங்கையில் நிலவிவரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வை காண இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானம் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசம் தற்போது பாரிய இரும்புக் கோட்டை போல் உள்ளது. முன்பு இஸ்ரேலியர்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு சென்று அங்கு வேலை பார்த்த பலஸ்தீனர்களுக்கு இப்போது அனுமதி மறுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாகவே இலங்கையர்களை பணிக்கு அமர்த்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

இஸ்ரேலில் இறந்த இலங்கையர்களின் உடல்கள் ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவை சிறியளவில் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், வேலைக்காக சென்று அங்கு மரணித்தவர்களின் உடல்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட நேருமானால், மிக மிக மோசமான எதிர்விளைவுகள் நாட்டில் ஏற்பட்டுவிடும். இஸ்ரேலிய உளவுப் படையான மொசாட் திட்டமிட்ட வகையில் இலங்கையில் மிக பாரதூரமான நெருக்கடியை உருவாக்கி ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கின்றதா என்கிற சந்தேகமும் எமக்கு உள்ளது.

மேற்கத்தைய நாடுகளின் ஆசிர்வாதத்துடன் மொசாட்டின் கழுகு பார்வை இலங்கை மீது விழுந்திருக்கிறது என்று சந்தேகிக்கின்றோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பூகோள அரசியலை கரைத்துக் குடித்தவர். அவருக்கு இவற்றை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று கிடையாது.

ஆனால், நாட்டுப் பற்றாளர் என்ற வகையில் அவருடைய மேலான கவனத்தை நாம் கோரி நிற்கின்றோம். இலங்கையர்களை இஸ்ரேலுக்கு அனுப்புகின்ற தீர்மானத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.” என்று தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin