இலங்கையின் அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவு ஏப்ரல் மாதம் அதிகரிக்கப்பட இருந்த நிலையில், ஜனவரி மாதம் முதல், அதில் பாதியையாவது வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளதுடன், ஏற்கெனவே அதிகபட்ச நிவாரணம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன், 1.3 மில்லியன் அரச ஊழியர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் வழங்குவதால் மாதத்துக்கு ரூ.13 பில்லியன் செலவு புதிதாக ஏற்பட்டுள்ளது.
அத்துடன், ஓய்வூதியம் பெறும் 730,000 பேருக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு அதிகரித்து வழங்கப்படுகிறது.
மேலும், காணி உறுதிப்பத்திரம் இல்லாத 200,000 குடும்பங்கள் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுமார் 50,000 பேருக்கு இலவச உரிமையும், 200,000 பேருக்கு அஸ்வெசுமவும் வழங்கப்படும்.
அத்துடன், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மாதம் 15,000 ரூபாயும், சிறுநீரகம் மற்றும் ஊனமுற்றோர் உதவித்தொகையாக 2,500 ரூபாயும் முதியோர் நலத்திட்டமாக 3,000 ரூபாயும் வழங்கப்படுகின்றது.
இதேவேளை, காத்திருப்போர் பட்டியலில் உள்ள அனைவருக்கும் அடுத்த ஆண்டில் நிச்சயம் பலன்கள் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.