பிசிசிஐ சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா

சர்வதேச கிரிக்கெட்டில் டாப் 10 பணக்கார கிரிக்கெட் சங்கங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல் பிசிசிஐ முதலிடத்தில் உள்ளது.

அண்மை காலங்களில் வளர்ந்து வரும் டி20 லீக் போட்டிகள் காரணமாக பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாட்டு வளர்ச்சி பெற்று வருகிறது. விளையாட்டு என்பதை கடந்து டி20 லீக்குகள் பொழுதுபோக்காக மாறியதே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

அந்த வகையில் ஐபிஎல் தொடரின் வளர்ச்சி காரணமாக உலகின் பணக்கார கிரிக்கெட் சங்கமாக பிசிசிஐ உயர்ந்துள்ளது. தற்போது பிசிசிஐ-யின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. பிசிசிஐ-யின் சொத்து மதிப்பு ரூ.18,760 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

சொத்து மதிப்பு பட்டியலில் 2வது இடத்தில் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை விடவும், 28 மடங்கு அதிகமாக பிசிசிஐ வளர்ந்துள்ளது. 2வது இடத்தில் உள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் சொத்து மதிப்பு ரூ.658 கோடியாக உள்ளது. அதேபோல் 3வது இடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இடம்பிடித்துள்ளது.

அதன் சொத்து மதிப்பு ரூ. 492 கோடியாக உள்ளது. இதன் மூலமாகவே பிசிசிஐ-யின் போக்கிற்கு ஏற்ப ஐசிசி முடிவுகளை ஏன் எடுக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சொத்து மதிப்பு ரூ.458 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல், வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் சொத்து மதிப்பு ரூ.425 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. 6வது இடத்தில் உள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் சொத்து மதிப்பு ரூ.392 கோடியாகவும், 7வது இடத்தில் ஆச்சரியமளிக்கும் வகையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்கம் உள்ளது.

அதன் சொத்து மதிப்பு ரூ.317 கோடியாகவும், 8வது இடத்தில் உள்ள இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சொத்து மதிப்பு ரூ.166 கோடியாகவும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் சொத்து மதிப்பு ரூ.125 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் 10வது இடத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ரூ.75 கோடி சொத்து மதிப்புடன் உள்ளது. ஆனால் திறமையில் டாப் 3 அணிகளுக்கு சவாலாக செயல்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Recommended For You

About the Author: admin