இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் ஐந்து வருடங்களில் பல கோடிகளை சம்பாதித்து இருக்கிறார்.
இத்தனைக்கும் அவரை விளம்பரங்களில் கூட பார்க்க முடியவில்லை. பெரு நிறுவனங்கள் அவரை விளம்பரங்களுக்கு பெரிய அளவில் பயன்படுத்த துவங்கவில்லை. ஆனாலும், கிரிக்கெட்டில் தன் கடின உழைப்பால் கோடீஸ்வரன் ஆகி இருக்கிறார் ரிங்கு சிங்
ரிங்கு சிங் தன் இளமைக் காலத்தில் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவரது தந்தை வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலையை செய்து வந்தார். வேலைக்கு செல்லாமல், கிரிக்கெட் ஆட வேண்டும் என ஆசைப்பட்ட ரிங்கு சிங்கிற்கு அவரது தந்தை எந்த உதவியும் செய்யவில்லை.
எனினும், தாயிடமும், சகோதரரிடமும் சேர்த்து வைத்த பணத்தை வாங்கி கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி ரிங்கு சிங் கிரிக்கெட் ஆடி வந்தார். பின்னர் 2017இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அதன்பின் 2018இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 80 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அந்த பணத்தை வைத்து தான் தன் குடும்பத்தினருக்கு வீடு கட்டினார் ரிங்கு சிங்.
தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கொல்கத்தா அணியிடம் சம்பளமாக 80 லட்சம் பெற்றார் ரிங்கு சிங். அதன் பின் 2022 ஏலத்தில் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை 55 லட்சம் விலை கொடுத்து வாங்கியது.
2023 ஆம் ஆண்டும் அதே சம்பளத்தில் அவர் அணியில் தொடர்ந்தார். இதுவரை CEAT டயர்ஸ், MRF டயர்ஸ் மற்றும் எஸ்ஜி எனும் கிரிக்கெட் உபகரணங்கள் விற்கும் நிறுவனமும் மட்டுமே ரிங்கு சிங்கை குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்து உள்ளன. இதன் மூலம் அவருக்கு 50 லட்சம் கிடைத்து இருக்கும் என கூறப்படுகிறது.
உள்ளூர் போட்டிகளில் சில ஆண்டுகளாக ஆடியதன் மூலம் சம்பளமாக மொத்தமாக ஒரு கோடி ரூபாய் வரை அவருக்கு கிடைத்திருக்கும் என கூறப்படுகிறது.
ஆக, ஐபிஎல் மூலம் 4.40 கோடி, உள்ளூர் போட்டிகள் மூலம் 1 கோடி, விளம்பரம் மூலம் 50 லட்சம், தற்போது இந்திய அணிக்கு ஆடி வருவதன் மூலம் ஒவ்வொரு டி20 போட்டிக்கும் சம்பளமாக 3 லட்சம் என சில ஆண்டுகளில் ரிங்கு சிங் சுமார் 6 கோடி வரை சம்பாதித்துள்ளார்.
இந்த பணத்தில் தான் அவர் வீடு கட்டி இருக்கிறார் என்பதால் அதை விடுத்து பார்த்தாலும் ரிங்கு சிங்கின் சொத்து மதிப்பு சுமார் 6 கோடி ஆகும். இனி வரும் நாட்களில் விளம்பர நிறுவனங்கள் அவரை சுற்றி வளைக்கும் என்பதால் விரைவில் பல கோடிகளை அவர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.