வட்டுகோட்டை இளைஞனின் மரணம் தொடர்பான அறிக்கை பொலிசாரால் வெளியீடு!

பெரும் சர்சையினை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் காவலில் இருந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

வீடு ஒன்றில் 90,000 ரூபாய் பணம் மற்றும் 16 ½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உயிரிழந்த இளைஞனும் அவரது நண்பரும் இம் மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டு சம்பவத்தில் கைதான இளைஞர்கள்
சந்தேகநபர்கள் கடந்த நவம்பர் 11ஆம் திகதி நாககேணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர் சிறையில் இருந்தபோது திடீரென சுகவீனமடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், மீண்டும் நோய்வாய்ப்பட்டு நவம்பர் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞரின் மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரியொருவர் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாரால் கடும் சித்திரவதை
இந்நிலையில் இளைஞன் தாக்குதலுக்கு உள்ளான காயங்களினால் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இளைஞரின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பொலிஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் குற்றமிழைத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

அதேவேளை வட்டுக்கோட்டை பொலிஸ் காவலில் உயிரிழந்த சித்தங்கேணி இளையர் நாகராஜா – அலெக்ஸ் இன் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor