இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறுகிறது. இந்தாண்டுக்கான திரைப்பட விழா வரும் நவ., 20 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதில் இந்திய படங்கள், சர்வதேச திரைப்படங்கள் என தனித்தனியாக திரையிடப்படுகின்றன. சர்வதேச படங்களில் பல நாடுகளில் இருந்து பல்வேறு படங்கள் திரையிட தேர்வாகி வருகின்றன.
அதேப்போல் இந்தியன் பனோரமா பிரிவில் தமிழில் இருந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‛விடுதலை’ படம், மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் திரிஷா உள்ளிட்டோர் நடித்து வரவேற்பை பெற்ற ‛பொன்னியின் செல்வன்’ படம் தேர்வாகி உள்ளது.
இதுதவிர, சம்யுக்த விஜயன் இயக்கிய ‛நீல நிற சூரியன்’, ‛காதல் என்பது பொதுவுடமை’ உள்ளிட்ட படங்களும் தேர்வாகி உள்ளன. மேலும் திரைப்படங்கள் அல்லாத ஆவணப்படங்கள் பிரிவில் பிரவீன் செல்வம் இயக்கிய ‛நன்செய் நிலம்’ என்ற படமும் தேர்வாகி உள்ளது.