மார்க் ஆண்டனி படத்தின் இந்தி சென்சார் லஞ்சப் புகார் விவகாரத்தில், நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ விசாரணை நடத்தினர்.
மார்க் ஆண்டனி படத்தின் இந்தி பதிப்பிற்கு சான்று வழங்குவதற்கு சென்சார் அதிகாரிகள் தன்னிடம் ₹6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், அதனை இரண்டு பரிவர்த்தனைகளில் கொடுத்ததாகவும் நடிகர் விஷால் குற்றஞ்சாட்டி இருந்தார். விஷாலின் குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதன்படி லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட திரைப்பட தணிக்கைத் துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்ட்ரா முதல்வருக்கு விஷால் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, மும்பையில் நடிகர் விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணன், அவர் மூலமாக லஞ்சம் பெற்றதாக கூறப்படும் தரகர்கள் மேனகா ஜுஜூ ராமதாஸ், ராஜன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர்.
இதனிடையே சமீபத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு தமிழகத்திலேயே சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.