‘LEO’ படம் எப்படி இருக்கு… – விமர்சனம் இதோ!

‘மாஸ்டர்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்தப் படத்தின் விஜயுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் மனைவி, மகன், மகள் ஆகியோருடன் காஃபி ஷாப் நடத்திக் கொண்டு அமைதியான முறையில் வாழ்ந்து வருகிறார் பார்த்திபன் என்ற விஜய்.

அவருடைய காஃபி ஷாப்புக்குள் திடீரென புகுந்த 5 பேர், அங்கு வேலை செய்யும் பெண் மற்றும் தன்னுடைய மகள் ஆகியோரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்த விஜய் அவர்களை கொன்றுவிடுகிறார்.

அந்த சம்பவத்தால் தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மூலம் பிரபலமாகிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு பலமுனையிலும் பிரச்னைகள் வருகின்றன. சேலம், தெலங்கானா என பல இடங்களில் இருந்து பலரும் இவரை தேடி வருகின்றனர்.

அவரின் குடும்பத்தினரை கொல்ல பார்க்கிறார்கள், பார்த்திபனை லியோ என்கிறார்கள், அவர்களுக்கும் பார்த்திபனுக்கும் என்ன சம்பந்தம்? அவர்களிடமிருந்து குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதே லியோ!

திரைப்படத்தில் ஏராளமான நடிகர்கள் இருந்தாலும் முதல் பாதி முழுவதும் விஜயை மையமாக வைத்தே கதை நகர்கிறது. இதனால் அவருக்கான காட்சிகள் அதிகமாக அமைக்கப்படுள்ளன.

ஒரு அமைதியான விஜய், அதிரடியாக மாறும் காட்சிகள் அவரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும். அத்துடன் இவர் பார்த்திபனா அல்லது லியோவா என்ற கேள்வி எழ வேண்டும் என்ற வகையில் முதல் பாதியை நகர்த்தியுள்ளார்.

மேலும், இடைவேளைக்கு முந்தைய காட்சியில் தான் அர்ஜூன், சஞ்சய் தத்தின் தாஸ் அண்ட் கோ அறிமுகமாகிறது. இரண்டாம் பாதியிலும் தன்னுடைய குடும்பத்தை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றவே முயற்சிக்கிறார் விஜய். ஆனால், அதற்கான காட்சிகள் விறு விறுப்பை கொடுக்க தவறுகின்றன.

முதல் பாதியைவிட இரண்டாம் பாதியில் ஆக்ஷன் அதிகம். இருந்தாலும் கொண்டாட வைக்கும் வகையில் இல்லை. நடிகர்களை பொறுத்த வரை விஜய் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்துள்ளார். ஆனால், சில இடங்களில் அவரின் நடிப்பு முந்தைய படங்களை நினைவுபடுத்துகிறது.

அதை தவிர்த்திருக்கலாம். த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் ஆகியோர் படத்தில் வந்து செல்கின்றனர் அவ்வளவே. அதேபோல் அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் வீணடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கதாபாத்திரம் எந்த விதத்திலும் படத்திற்கு வலு சேர்க்கவில்லை.

லியோ படத்தின் ஒளிப்பதிவு பணியை மனோஜ் பரமஹம்சா சிறப்பாகவே செய்துள்ளார். அனிருத் இசை சில இடங்களில் மட்டுமே சிறப்பாக அமைந்திருக்கிறது. காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தால் இன்னும் நல்ல பங்களிப்பை அவரால் கொடுத்திருக்க முடியும். கிராபிக்ஸ் காட்சிகளையும் சில இடங்களில் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம்.

லோகேஷ் கனகராஜின் மாநகரம் முதல் விக்ரம் வரையிலான படங்களில் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று ஒவ்வொரு காட்சியிலும் எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்கும். அந்த வகையில் நேர்த்தியாக திரைக்கதை அமைத்து படமாக்கியிருப்பார். ஆனால், அது லியோ படத்தில் மிஸ் ஆகியுள்ளது.

இது விஜய் படமாக இல்லாமல் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாகவே உள்ளது. ஆனால், அது மேக்கிங்கில் மட்டுமே தெரிகிறது, அது திரைக்கதையிலும் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். லியோ படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் இது LCU (Lokesh Cinematic Universe) வா? இல்லையா? என்ற கேள்வி இருந்தது. அது படத்தை திரையிலோ அல்லது ஓ.டி.டி.யிலோ பார்க்கும் போது தெரியும்.

ஒட்டுமொத்தத்தில் History of Violence படத்தின் Official ரீமேக்கான லியோ, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படங்களில் சுமாரான படம் என்று சொல்ல வைத்துள்ளது. மேலும், இந்தப் படத்தில் விஜய் அந்தர் ஜாவ், அந்தர் ஜாவ் என அடிக்கடி வசனம் பேசுவார். ஆனால், படம் பார்த்தவர்கள் அந்தர் மத்ஜாவ் (Andar Mat Jao) என்று தான் சொல்லவேண்டும்.

Recommended For You

About the Author: admin