அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாழில் உள்ள முகாமில் பணிபுரியும் இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மோசடி தொடர்பில் , பாணந்துறை கோரகன கிராமத்தைச் சேர்ந்த இராணுவ மேயரின் மனைவியான 46 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ மேஜரை கைது செய்ய விசாரணை
இந்நிலையில் மோசடி தொடர்பில் இராணுவ மேஜரை கைது செய்ய பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள். சந்தேகத்திற்குரிய மேஜர் யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாழில் உள்ள முகாமில் பணிபுரிவதாக தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாணந்துறை வடக்கு பொலிஸாருக்கு 5 முறைப்பாடுகள் மற்றும் தெஹிவளை, கல்கிசை உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களுக்கு கிடைத்த பல முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதோடு கைதான பெண்ணின் வீட்டில் ஐந்து கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 42 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், பெண்ணின் கணவரான மேஜரின் வங்கி கணக்கில் குறித்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் கைதான சந்தேகநபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.