மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முற்றாக சுகப்படுத்தலாம் – தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ
சுக வனிதையர் மற்றும் புற்றுநோயினை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வதற்கான மத்தியஸ்தானங்களுக்கு மேலதிகமாக நாடாளாவிய ரீதியில் சத்திரசிகிச்சை நிபுணர்களின் கீழ் 30 புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள்
மார்பகப் புற்றுநோய் வருவதை தடுக்க முடியாவிட்டாலும் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் முழுமையாக சுகப்படுத்த முடியுமென தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்தார்.
மார்பகப் புற்றுநோயாளர்களை கண்டறிவதற்காக சந்தர்ப்பங்களை அதிகரிக்கும் வகையில் சுக வனிதையர் மற்றும் புற்றுநோயினை ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வதற்காக நிறுவப்பட்டிருக்கும் நிலையகளுக்கு மேலதிகமாக நாடாளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் உள்ள சத்திரசிகிச்சை நிபுணர்களின் கீழ் 30 புற்றுநோய் சிகிச்சை நிலையங்களை புதிதாக ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் “101 கலந்துரையாடல்” நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ,
“உலகிலும் இலங்கையிலும் பெண்களுக்கே அதிகளவில் மார்பகப் புற்றுநோய் ஏற்படுகிறது. அதனால் ஆண்களுக்கு அந்த நோய் தொற்றாது என்று கருதக்கூடாதெனவும், இருப்பினும் ஒப்பீட்டளவில் பெண்களுக்கே நோய் ஏற்படுவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன.
ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களே 80 சதவீதம் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர் என்பதோடு, குடும்ப வழியில் எவருக்கேனும் புற்றுநோய் இருத்தலும் இதற்கான ஒரு சாதகமாக காணப்படுவதோடு, மரபணு திரிபுகளும் 15 சதவீத சாதகம் என்று குறிப்பிடலாம்.
முன்பு நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களுக்கும், 30 வயதுக்கு முன்னதாக முதல் குழந்தை பெற்றிருக்காதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன. 11 வயதுக்கு முன்னதாக பூப்படைதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மாற்றங்கள் 55 வயதுக்கு பின்னரும் காணப்படுதல் என்பனவும் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களாக காணப்படுகின்றன. இவற்றை எம்மால் மாற்றியமைக்க முடியாது.
உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே அதற்கான காரணமாக அமைந்துள்ள அதேநேரம், ஹார்மோன்கள் அடங்கிய கருத்தடை மாத்திரைகளை நீண்ட நாட்களாக பாவனை செய்வோருக்கும் மார்பகப் புற்று ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகமாகும். இருப்பினும் தற்போது ஹார்மோன்களை கலப்புச் செய்து கருத்தடை மாத்திரைகள் உற்பத்திச் செய்யப்படுவதால் அந்த பாதிப்புக்கள் ஓரளவிட்டு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
மேற்படி விடயங்களில் மாற்றங்களை செய்ய முடியாவிட்டாலும், பூப்படைதலின் பின்னர் ஏற்படும் அதிக உடல் எடை, உணவு முறைமை, உடற்பயிற்சி, மதுபானங்கள் மற்றும் சிகரெட் பாவனை உள்ளிட்ட மாற்றம் செய்யக்கூடிய விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தலாம்.
ஒவ்வொரு மாதத்திலும் உரிய தினத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுயமாக புற்றுநோய் பரிசோதனையை செய்துகொள்வது சிறந்தாகும். அது தொடர்பில் சுகாதார துறையினரால் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மார்பக புற்றுநோய் தொடர்பிலான சுய பரிசோதனைகளை செய்துகொள்ளும் போது, வலியுடன் கட்டிகள், தோல் தடிப்பு, நிறம் மாறல், தோற்றத்தில் மாற்றம், மார்பகங்களில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள் உள்ளிட்ட மாற்றங்களை விரைவில் அறிந்துகொள்ள முடியும். அதேபோல் கமக்கட்டுக்களில் ஏற்படும் கட்டிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
அறிகுறிகள் தெரியவரும் பட்சத்தில் வைத்தியரை நாடும் அதேநேரம் சுகவனிதையர் சிகிச்சைக்கும் செல்ல முடியும். அதற்கு மேலதிகமாக, நாராஹேன்பிட்டி, இரத்தினபுரி,மாத்தறை, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் 05 புற்றுநோய சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், நாடாளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை நிபுணர்களின் கீழ் 30 புற்றுநோய் சிகிச்சை நிலையங்களை புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ளது. அவ்வறான இடங்களில் பரிசோதனைகளை செய்துகொள்ள முடியும்.
இலங்கையிலும் உலகத்திலும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், உள்நாட்டில் அறியப்பட்டிருக்கும் 37,000 புற்றுநோயாளர்களில் 20,000 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் மத்தியில் மார்பக் புற்றுநோயாளர்களே அதிகம் உள்ளனர். 2020 அந்த நோயளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரித்திருப்பதோடு பெண்களில் 26 சதவீதமானவர்கள் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இலங்கையில் மாத்திரமின்றி முழு உலகிலும் இதேநிலைதான் காணப்படுகின்றது. 2020 இல் உலகில் 2.2 மில்லியன் மார்கப் புற்றுநோயாளர்கள் கண்டறியப்பட்டிருந்தனர். அதன் பாதிப்பு காரமாண உலக அளவில் 6,85,000 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையிலும் 2019 ஆம் ஆண்டு மார்பகப் புற்றுநோயினால் 784 பேர் உயிரிழந்துள்ளமையும் அவர்களில் 18 ஆண்களும் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தவிர்த்துக்கொள்ளக்கூடிய ஏனைய பல புற்றுநோய்கள் முறையற்ற உணவுப் பழக்கங்களின் விளைவாகவே ஏற்படுகின்றன. அதனால் முடிந்த வரையில் துரித உணவுகளிலிருந்து விடுபடுவதே அதற்குரிய சிறந்த தீர்வாகும். கோதுமை மா புற்றுநோய்க்கான சாதக காரணியாக அமையாவிட்டாலும் அதனால் ஏற்படுத்தப்படும் அதிக எடை புற்றுநோய்க் காரணிகளை தோற்றுவிக்கும்.
அதனால் பெரியவர்கள் நாளாந்தம் அரை மணித்தியாலம் என்ற அடிப்படையில் வாரத்தின் ஐந்து நாட்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, வெற்றிலை, பாக்கு ஆகிய இரு பொருட்களும் புற்றுநோய்க் காரணிகள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அவற்றின் பாவனையை தவிர்ப்பதன் மூலம் வாய் மற்றும் நுரையீரலை அண்டியதாக ஏற்படும் புற்றுநோயை ஆண்கள் தவிர்த்துகொள்ள முடியும்.