மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
” தற்போதைய அரசாங்கம் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி, பொருளாதாரத்தை சீரழித்து, மக்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இரண்டு தடவைகள் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர்க்கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒருவேளை உணவை உட்கொள்வதற்கு கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வருமானத்தின் மீது அதிக வரி விதித்து சாதாரண மக்களை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது. நாட்டு மக்கள் தொடர்பில் எந்த அக்கறையும் இந்த அரசாங்கத்திடம் இல்லையா என வினவுகிறோம்? சாதாரண மக்கள் எவ்வாறு இதனை தாங்கிக் கொள்வார்கள்? ஏன் அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.
நாட்டு மக்கள் எல்லாவற்றையும் ஓரளவுக்கு தான் பொறுத்துக் கொள்வார்கள். மக்களின் பொறுமையை அரசாங்கம் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க கூடாது. மக்கள் வீதிக்கு இறங்கினால் பாதுகாப்பு தரப்பினர் கொண்டு அடக்கி, ஒடுக்கி விடலாம் என்று நினைக்க வேண்டாம்.
அந்த காலம் சென்றுவிட்டது. நாம் தெளிவாகக் ஒன்றை இந்த அரசாங்கத்திடம் கூறிக்கொள்கிறோம். மின் கட்டணம் மீண்டும் ஒரு தடவை அதிகரிப்படுமாயின் நிச்சயம் வீதிக்கு இறங்குவோம். ரணில் தலைமையிலான அரசாங்கத்தை நேருக்கு நேர் மோதி பார்ப்போம்.
பொறுமையை இழந்துள்ளோம். நாடாளுமன்றத்தில் இருந்தாலும் சரி இல்லாமல் போனாலும் சரி நிச்சயம் இந்த அரசாங்கத்துக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என குறிப்பிட்டார்.