யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தின் (வ -து ) “கூட்டுறவு நகர்” நாளை திறந்து வைக்கப்படவுள்ளது.
இல. 373 பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப்பட்ட கூட்டுறவு நகரே இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை நல்லூரில் நடைபெறவுள்ள நிலையில் அந்த நினைவேந்தல் நடைபெறும் சம நேரத்தில் இவ்வாறு கூட்டுறவு நகர் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், பொதுச் சபை உறுப்பினர்கள், இயக்குநர் சபை உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயர்நீத்த நாள் தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தல் நிகழ்வுகளால் சோகத்தில் மூழ்கியிருக்கும்.
அவ்வேளையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்.மாநகர சபைக்கு நல்லூர் நாலாம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரான லோகசிவம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இம்முறை தியாக தீபம் திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த நினைவேந்தலுக்கு கூட்டுறவு துறை சார்ந்தவர்கள் செல்வதைத் தடுக்கும் நோக்கில் கூட்டுறவு நகர் திறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.