தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ், இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரராக அதிகாரப்பூர்வமாக ஆனார். கடந்த மாதம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் (லைவ் ரேட்டிங்) 17 வயதான குகேஷ் 2755.9 புள்ளிகளுடன் 9-வது இடத்தை பிடித்து விஸ்வநாதன் ஆனந்தை (2754 புள்ளி) முந்தினார்.
இதன் மூலம் செப்டம்பர் 1-ந் தேதி வெளியிடப்படும் தர வரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து குகேஷ் முந்தி இருந்தால் இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக ஆவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் லைவ் ரேட்டிங் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சமீபத்தில் உலக கோப்பை செஸ் போட்டியில் கால் இறுதி வரை முன்னேறிய குகேஷ் 2758 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்தார்.
முன்னாள் உலக சாம்பிய னான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளர். இதன் மூலம் குகேஷ் 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆன்ந்தை முந்தி அந்த இடத்தை அதிகாரப்பூர்வமாக பிடித்தார். உலக கோப்பை செஸ் போட்டியில் 2-ம் இடம் பிடித்த தமிழகத்தின் பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் 19-வது இடத்தில் உள்ளார். இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளார். இந்திய செஸ் தரவரிசையில் முதல் 3 இடங்களில் தமிழக வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.