அமெரிக்காவில் இளைஞர்கள் புதுவகை போதை பொருளுக்கு அடிமையாகி அதிக அளவு மரணங்கள் நடந்து வருவதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் தரவுகளின்படி போதை பொருளை அளவுக்கு மீறி உட்கொள்வதால் நிகழும் மரணங்கள் அமெரிக்காவில் 5 நிமிடத்திற்கு 1 எனும் அதிர்ச்சியூட்டும் விகிதத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதுவகை போதைப் பொருள்
உலகின் வல்லரசு நாடான உள்ள அமெரிக்காவில் போதை பொருள் பழக்கம் பரவலாக இருந்து வரும் ஒன்றுதான். எனினும் தற்போது மிகப்பெரும் சமூக பிரச்சினையாக போதை பொருள் பழக்கம் மாறியிருக்கிறது.
இந்நிலையில் உளவியல் வல்லுனர்களும், பொலிஸாரும், போதைப்பொருள் தடுப்பு துறையினரும் அதனை சமாளிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். “ஜோம்பி டிரக்” என பெயரிடப்பட்ட புதுவகை போதைப் பொருளை அங்குள்ளவர்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர்.
“டிரான்க்யூ” என அமெரிக்காவில் அழைக்கப்படும் இந்த போதை மருந்து, அடங்காத மாடுகளையும், குதிரைகளையும் அடக்க உபயோகப்படுத்தப்படும் ஒரு தூக்க மருந்தாக, மிருகங்களுக்கு மட்டும் பயன்படுத்தபட்டு வந்தது.
உயிரை காப்பது கடினம்
அமெரிக்கர்கள் அதனை சட்ட விரோதமாக வாங்கி பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அதை பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கும் அதிக அளவு போதையானது அவர்களை அதை மீண்டும் பயன்படுத்த தூண்டுகிறது.
இந்த போதை பொருளை அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் மற்றவர்களும் இதனை பயன்படுத்தும் பழக்கத்திற்கு விரைவில் ஆளாக தொடங்கி விடுகின்றனர்.
அதேசமயம் கொகைன் மற்றும் ஹெராயின் போன்ற போதை பொருளின் அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டவர்களை காப்பதற்காக கொடுக்கப்படும் மருந்துகள், அவர்கள் உடலில் வேலை செய்யும்.
எனினும் இந்த புதுவகை போதை பொருள் அளவுக்கு அதிகமானால் அதை எடுத்துக் கொள்பவர்களின் உயிரை காப்பது கடினமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.