யாழில் 60 க்கும் மேற்பட்டவர்களை தேடும் பொலிசார்

யாழ்ப்பாணத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அவர்களையும் அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் போலி சாரதி அனுமதி பத்திரத்துடன் கடந்த 08 ஆம் திகதி இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினருக்கு பொலிஸார் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (14-07-2023) போலி சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிக்க வந்த தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்பில் போக்குவரத்து திணைக்களத்தினர் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் அவரை கைது செய்திருந்தனர்.

மேலும், நேற்று திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை சிற்றூழியர் ஒருவரும், இன்னுமொருவரும், போலி சாரதி அனுமதி பத்திரத்துடன், கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், யாழில் சுமார் 60 க்கும் அதிகமானோருக்கு போலி சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்து பரீட்சையில் இரண்டு தரம் தோற்றியும் சித்தியடைய தவறியவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று, செயற்பட்டு, அவர்களிடம் அதிக பணத்தினை பெற்று, போலி சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கியுள்ளது.

குறித்த கும்பலுக்கும் மாவட்ட போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கும் என தாம் சந்தேகிப்பதால், நீதிமன்ற அனுமதியினை பெற்று, மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து போலி சாரதி அனுமதி பத்திரத்தை வழங்கி வரும் கும்பலை கைது செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: webeditor