காலநிலை மாற்றமடைந்ததால் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளால் அடிக்கடி அவதிப்படக்கூடும்.
அதில் ஒன்று தான் தொண்டை புண் அல்லது தொண்டை வலி.
பொதுவாக குளிர்ச்சியான காலநிலையின் போது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும்.
இதனால் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் எளிதில் உடலினுள் புகுந்து பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடலினுள் கிருமிகளானது நுழைந்ததும் முதலில் தொண்டையைத் தான் தாக்குகின்றன.
தொண்டையில் கிருமி தொற்றுகள் ஏற்பட்டதும் அரிப்பு, கரகரப்பு, வறட்சி மற்றும் ஒருவித அசௌகரியமான உணர்வை உண்டாக்கும்.
தொண்டையில் வலி, பேசும் போது அல்லது விழுங்கும் போது வலி மற்றும் லேசான காய்ச்சல் போன்றவற்றையும் சந்திக்கக்கூடும்.
வெதுவெதுப்பான உப்பு நீரால் வாயைக் கொப்பளிக்கவும்
தொண்டை வலியால் அவதிப்படும் போது வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.
அத்தோடு வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கலந்து அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
இப்படி அடிக்கடி செய்யும் போது உப்பில் உள்ள ஆன்டி பாக்டிரியல் பண்புகள் தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்றுக்களை சரிசெய்து விரைவில் குணமாக வழிவகை செய்யும்.
மஞ்சள் நீர்
ஆயுர்வேதத்தில் வீக்கம், காயம் முதல் சளி வரை பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.
அதுவும் தொண்டைப் புண்ணால் ஒருவர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது நீரில் மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் கலந்து குடித்தால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து விரைவில் தொண்டை புண் சரியாகும்.
தேன்
இனிப்புச் சுவையைக் கொண்ட தேன் ஒரு மருத்துவ பொருளும் கூட. ஏனெனில் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
அதுவும் தொண்டை வலி அல்லது தொண்டை புண்ணால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு ஸ்பூன் தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான எலுமிச்சை ஜூஸில் சேர்த்தும் குடிக்கலாம்.
இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
துளசி
மிகவும் புனிதமான செடியாக கருதப்படும் துளசி, ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது.
ஆயுர்வேதத்தில் துளசி சளி, இருமல், ஜலதோஷம், தொண்டை வலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
ஏனெனில் துளசியானது உடலில் ஆன்டிபாடி உற்பத்தியை மேம்படுத்துகிறது மற்றும் சுவாசப் பாதையில் உள்ள சளியை வெளியேற்றி, சுவாச பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது.
அதிமதுரம்
ஆயுர்வேத மூலிகையான அதிமதுரம் தொண்டைப் புண்ணிற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
அதுவும் இது மூக்கடைப்பு, சுவாசப் பாதையில் உள்ள சளியை இளகச் செய்வதோடு, இருமலைக் குறைக்கிறது.
குறிப்பாக கடுமையான தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள், அதிமதுர பொடியுடன் தேன் சேர்த்து கலந்து சாப்பிட விரைவில் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.