‘ஸ்மார்ட்’ போன்களின் தயவால் தற்போது உலகம் ரொம்பவே சுருங்கிவிட்டது. கடலை மிட்டாய் முதல் காதலி வரை எல்லாவற்றையும் செயலிகளுக்குள் (Apps) கொண்டுவந்துவிட்டனர். ஆம், மனித உறவுகளையும் கூட தற்போது கடைச்சரக்காக மாற்றிவிட்டன ‘டேட்டிங்’ செயலிகள். “சில தளங்கள் நீண்ட கால உறவுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எங்கள் செயலியில், உங்களுக்கு ‘ரொமான்டிக்’ அனுபவத்தை வழங்குவதற்காகவே நாங்கள் செயல்படுகிறோம்.
உங்கள் இணையிடம் நீங்கள் தேடுவது எதுவாக இருந்தாலும் அதை பூர்த்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் வழங்குகிறோம்” என்று விளம்பரம் வெளியிட்டுள்ளது ஒரு பிரபல ‘டேட்டிங்’ செயலி. இதுபோன்ற கவர்ச்சி விளம்பரங்களாலும், அதில் வரும் புகைப்படங்களாலும் தூண்டப்படும் இளைஞர்கள் ‘டேட்டிங்’ செயலிகளுக்கு ஏராளமாக பணம் கட்டி ஏமாறுகிறார்கள். அல்லது இதுபோன்ற ‘டேட்டிங்’ செயலிகளை பயன்படுத்தி அறிமுகமாகும் மோசடி நபர்களின் மிரட்டல்களால் பணத்தையும், மானம், மரியாதையையும் இழக்கிறார்கள். மாறிவரும் கலாசாரத்தின் அடையாளமாக ‘டின்டர்’, ‘பம்புள்’, ‘ஹிங்கே’, ‘ஹப்பன்’ போன்ற ‘டேட்டிங்’ செயலிகள் தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகின்றன.
உலக அளவில் ‘டின்டர்’ ஒரு கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை கொண்டுள்ளது. இதுபோன்ற பெரிய ‘பிராண்டுகள்’ மட்டுமன்றி உள்ளூர் அளவிலான ‘டேட்டிங்’ செயலிகளும் ஏராளமாக வந்துவிட்டன. முன்பின் தெரியாத ஆண், பெண் இரண்டு தரப்பினரையும் தொடர்புப்படுத்தி காசு பார்ப்பதுதான் ‘டேட்டிங்’ செயலிகளின் அடிப்படை ‘லாஜிக்’ என்பதை பயனாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும். அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் ‘டேட்டிங்’ செயலிகளையும், அவர்களின் ‘ஏஜெண்டு’களையும் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.
‘டேட்டிங்’ செயலிகளை வாய்ப்பாக பயன்படுத்தி ஏராளமான ‘பிளாக்மெயில்’ கும்பல்கள் அலைந்துகொண்டிருப்பதை மனதில்கொண்டு, முன்பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையோடு பழகுங்கள். மேலை நாடுகளைப்போல் பெண்களுக்கு சம உரிமையும், சம வாய்ப்புகளும் நமது நாட்டில் இன்னும் சாத்தியப்படாத நிலையில், ‘டேட்டிங்’ செயலிகள் மூலமாக அறிமுகமாகும் முன்பின் தெரியாத நபர்கள் குறித்து இங்குள்ள பெண்கள் கூடுதல் எச்சரிக்கை கொண்டிருக்கவேண்டும் என்பது எனது சிறப்பு வேண்டுகோள்.