வட கொரியா விண்வெளிக்கு அனுப்ப முயன்ற உளவுச் செய்மதி கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட கொரியாவின் விண்வெளி முகவரகம் இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில், இராணுவக் கண்காணிப்பு செய்மதியான மலிகயோங் 1 (Malligyong) எனும் செய்மதியை, சோலிமா-1 (‘Chollima-1’) ரொக்கெட் மூல் இன்று அதிகாலை ஏவியதாக தெரிவித்துள்ளது.
எனினும், இரண்டாவது கட்டத்தின் என்ஜினின் அசாதாரண ஆரம்பம் காரணமாக இந்த ரொக்கெட் கடலில் வீழ்ந்ததாக தெரிவித்தள்ளது. அதேசமயம் மேற்படி ரொக்கெட் பாகங்கள் சிலவற்றை தென் கொரியா கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வட கொரியாவின் ஏவுகணை சோதனை முயற்சிகள், ஐநா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்துக்கு முரணானதாகும்.
இந்நிலையில், ஐநா செயலாளர் நாயககம் அன்டோனியோ குட்டேரெஸ், வடகொரியாவின் செய்மதி ஏவும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகியனவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அதேவேளை வட கொரியாவுக்குச் சொந்தமான, இயங்கும் நிலையிலுள்ள செய்மதி எதுவும் தற்போது விண்வெளியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..