பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆதரவாளரும் சர்வதேச தமிழ் வானொலி (ஐ.ரி்.ஆர்) பிரான்ஸ்-இலங்கை அபிமானியுமான அமெரிக்காவைச் சேர்ந்த உமாசுதன் சிங்கநாயகத்தின் பிறந்த தினத்தையொட்டி சிங்கநாயகம் புனிதம் குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்பில் முல்லைத்தீவு மாங்குளம் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலையில்) கல்வி கற்கும் 448 மாணவர்களுக்கும் 36 ஆசிரியர்களுமாக மொத்தம் 484 பேருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
குறித்த பாடசாலையின் அதிபரான இரத்தினசிங்கம் கோகுலன் ,தங்கள் பாடசாலையின் குடிநீரானது 440 அளவு கல்சியம் செறிவை கொண்ட நீராகவும் கிருமி தொற்றுள்ள நீராகவும் காணப்படுவதாகவும் தங்கள் பாடசாலைக்கு சுத்தமான சுகாதார முறைப்படியான குடிநீரைப் பெறுவதற்கு கல்சியம் நீக்கி இயந்திரங்கள்,மோட்டார்கள்,தண்ணீர்த் தாங்கி வசதிகள் ஏற்படுத்தி தரும்படி பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 83 ஆயிரம் ரூபா செலவில் திருத்தப்பணிகளும் குடிநீர் சுத்திகரிப்பு வேலைகளும் நிறைவேற்றி,பூமணி அம்மா அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம்,ஆலோசகர் இ.மயில்வாகனம்,நிர்வாக சபை உறுப்பினர் சா.தவசங்கரி ஆகியோரால் 26/05/2023 அன்று குடிநீர்த் திட்டம் ஆரம்பித்து வைத்து கையளிக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதி அதிபர், மா.ரதிக்குமார் பாடசாலை அபிவிருத்தி சங்க உப செயலாளர் அ.தனராஜ்,ஆசிரியர்கள்,மாணவர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.