சில்லறை சந்தையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை விற்பனை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்திடமிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நுகர்வோருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் முன்னதாக அறிவித்திருந்தது.
நாட்டில் முட்டை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
எனினும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் மேல் மாகாணத்தில் உள்ள பாரியளவில் உற்பத்தியில் ஈடுபடும் வெதுப்பகத் தொழிற்துறைக்காக மாத்திரமே விற்பனை செய்வதற்கு இது வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, கடந்த 26 ஆம் திகதி ஒரு மில்லியன் முட்டைகளுடன் மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது. இந்த முட்டை மாதிரிகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு, அனுமதி பெறப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இறக்குமதி செய்யப்பட்ட 2 மில்லியன் முட்டைகள் துறைமுகத்திலிருந்து இன்னும் அகற்றப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.