யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மனை குறிக்கும் நாகபூசணி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.
நீதிமன்றின் கட்டளை என யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் ஒப்பமிடப்பட்ட அறிவித்தல் உருவச்சிலைக்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நீதிமன்ற வழக்கு இலக்கம் குறிப்பிட்டு பொலிஸாரின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
2023.04.15 ஆம் திகதி யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் பரிசோதகரினால் யாழ்.பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் ஊர்காவற்றுறை வீதியில் எவ்வித அனுமதியுமின்றி சட்டத்திற்கு புறம்பாக இனந்தெரியாத நபர்கள் மூலம் அம்மன் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் இன, மத, சமூக உடன்பாடுகளுக்கு விளைவுகள் ஏற்படும் நிலை உருவாகி சமாதான சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதென அறிக்கை செய்து அந்தச் சிலையினை அகற்றுவதற்கு வீதி அபிவிருத்தி சபையின் அதிகாரிக்கு கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
எனவே இந்தச் சிலையினை உரிய அனுமதிபெற்று அமைத்து இருப்பின் அவ் அனுமதியுடன், உருவாக்கிய நபர்கள் யாரேனும் இருந்தால் அல்லது இந்தச் சிலையினை உரிமை கோரும் யாராவது இருந்தால் 18.04.2023ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு சமூகமளித்து உரிமை கோருமாறும் மன்று கட்டளையிடுவதுடன் இதன் உரிமை கோருவதற்கு தவறும் பட்சத்தில் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இந்தச் சிலை அகற்றப்படும் என இத்தால் அறியத்தருகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது.
இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர்.
உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திர சேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
உருவச் சிலையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.