ஓட்டமாவடி பிரதேச சபையின் 60வது அமர்வில் உரையாற்றிய ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரன்

எமது வடமுனை மற்றும் வாகனேரி பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றம் குறித்த பல எதிர்பார்புக்களுடன் பிரதேச சபைக்கு வந்திருந்தோம் ஆனால் அவை நிறைவேறாத நிலையில் இன்று கலைந்து செல்கின்றோம் என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து யோகேஸ்வரன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் 60வது அமர்வில் உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

எமது பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றம் குறித்த பல எதிர்பார்புக்களுடன் பிரதேச சபைக்கு வந்திருந்தோம் ஆனால் அவை நிறைவேறாத நிலையில் இன்று கலைந்து செல்கின்றோம். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் உள்ளடங்கும் வட்டாரங்களில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வட்டாரங்களான வடமுனை மற்றும் வாகனேரி வட்டாரங்களில் உள்ள பல கிராமங்கள் யுத்தம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது.

வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்கள் வாழும் பிரதேசமாக காட்டப்படும் இப்பிரதேசம் பல வருடங்களாக அந்த நிலையிலிருந்து மீள முடியாது அந்த கோட்டிற்குள்ளே தொடர்ந்து இருப்பது அங்கு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள அரச அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாட்டை பிரதிபலிக்கின்றது. வீடு மல சலகூடம் வீதி போன்ற அடிப்படை பூர்த்தி செய்யப்ப்படவில்லை. ஒரு சில திட்டங்கள் மூலம் சில விடயங்கள் இடம்பெற்றிருந்த போதும் அவை சரியான முறையில் இடம் பெறவில்லை. உதாரணமாக பல குடும்பங்கள் மீக நீண்ட நாளாக காலமாக அரச உதவியினூடாக ஓர் மலசலகூடத்தை எதிர்பார்க்கும் நிலையில் சில குடும்பங்களுக்கு இரண்டு மலசல கூடம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வலுவிழந்த நிலையில் எத்தனையோ வயோதிபர்கள் மிகநீண்ட காலமாக அல்லல்படுகின்றனர் அவர்களின் நலன் சார்ந்தும் அங்கு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள அதிகாரிகள் உரிய கவனம் எடுக்க தவறியுள்ளனர். மக்களின் கருத்துக்களையோ அவர்களின் தேவைகளையோ கருத்தில் கொள்ளாத பாரபட்சமான போக்கை இச்செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றது. அரச உதவியை எதிர்பார்த்து வாழும் இந்த ஏழை மக்கள் அரச அதிகாரிகளையோ அதனை சார்ந்த உள்ளுர் அமைப்பு தலைவர்களையோ எதிர்க்க அச்சம் கொள்ளும் நிலையை நாங்கள் அவதானிக்கின்றோம்.

பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பல விடயங்களை நாம் இனம் கண்டு அவற்றை சபையில் தீர்மானமாக நிறைவேற்றி அதனை அமைத்துக் கொடுக்க முயற்சித்தோம் அத்துடன் சபை எல்லையை கடந்தும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தனிநபர்கள் மூலமாகவும் எமது மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டுமான அபிருத்தி விடயங்களையும் முன்னெடுத்துளோம். அவற்றில் சில முயற்சிகள் நிறைவேறியுள்ளது, சில விடயங்கள் தொடங்கிய நிலையில் பூரணமடையாத நிலையிலுள்ளது. அதேவேளை பல விடயங்கள் நிறைவேற்ற வேண்டியுள்ளது. அவற்றில் உதாரணமாக வாசிகசாலை புனரமைப்பு, சிறுவர் பூங்கா மற்றும் பொது பொழுது போக்கு பூங்கா அமைத்தல், உள்ளக வீதிகள் புணரமைப்பு, பொது மயாணங்களை புணரமைத்தல், போன்ற விடயங்களை குறிப்பிடலாம். அதற்கு மேலாக இப்பிரதேச மக்களின் யானையிலிருந்து பாதுகாப்பதற்கான வேலிகள் அமைத்தல் மற்றும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் விடயம் மிக முக்கியமானது. காட்டு யானைகளால் அப்பிரதேச மக்களின் உயிர்களும், உடைமைகளும், வாழ்வாதாரமும் சேதத்திற்கு உள்ளாக்கப்படுதல் நீண்டகால பிரச்சினையாக தொடர்ந்து செல்கின்றது.

அதேபோல அப்பிரதேசங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்காமையால் சிறு குழந்தைகள் தொடக்கம் வயோதிபர் வரை பல்வேறு வகையான பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். எமது முயற்சிகள் மூலமாக சில வசதிகள் ஏற்படுத்தப்பட்ட போதும் அவை போதுமானதாக இல்லை எனவே இவ்வாறன நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வின்றி தொடர்வது மிகவும் மன வேதனையை தருகின்றது. தற்போது பொருளாதார சிக்கல் நிலையினை இவற்றிக்கு சாட்டாக சொல்லி அரசாங்கமோ அரச அதிகாரிகளை தப்பித்து கொள்ள முடியாது ஏனெனில் இது நேற்று இன்றைய பிரச்சினை அல்ல பல வருடங்களாக தொடரும் பிரச்சினை. உரிய தேவைகளை இனம் கண்டு தீர்த்து வைக்காமல் அலட்சியமாக செயற்பட்டதே இன்றைய நிலைக்கு காரணம் என்பதை விடயத்திற்கு பொறுப்பானவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் இப்பகுதி மக்களுக்கான அத்தியாவசிய பொது விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

தபால் நிலையம் ஆரம்ப காலத்தில் புணாணை பிரதேசத்தை மையமாக கொண்டு புணாணையில் ஓர் தபால் நிலையமும் வாகனேரி கிராமத்தை மையமாக கொண்டு ஓர் தபால் நிலையமும் இயங்கி வந்தது இவை யுத்தம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளை காரணமாக கொண்டு தற்காலிக இடங்களுக்கு முறையே புணாணை தபால் நிலையம் வெலிக்கந்தையை அண்டியுள்ள ரிதிதன்னை எனுமிடத்திற்கும், வாகனேரி தபால் நிலையம் ஓட்டமாவடியை அண்டியுள்ள காத்தமுனை எனுமிடத்திற்கும் இடமாற்றப்பட்டது யுத்தம் முடிவுற்று மீள்குடியேற்றம் இடம் பெற்று பல வருடங்களாகியும் இந்த அத்தியாவசிய ஸ்தாபனங்கள் உரிய இடங்களுக்கு மீளளிக்கப்படவில்லை இந் நிலையில் போக்குவரத்து வசதிகள் குறைவான இப் பிரதேசத்தின் மக்கள் தபால் சேவையை பெற்றுக்கொள்ள சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்திற்கப்பால் செல்கின்றனர்.

இதில் அரச உதவிக் கொடுப்பனவை பெறும் வயோதிபர், வலுவிழந்தோர் மற்றும் விதவைகள் சிறு தொகை கொடுப்பனவை பெற தமது போக்குவரத்து செலவையும் அத்தொகை ஈடு செய்ய போதுமானதாக இல்லாமையால் பல மைல் தூரம் நடந்தும் செல்கின்றனர் இது பெரும் துயரம். இவ்விடயத்தினை உரிய அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியிருந்தோம் இதற்கான கவனயீற்பு போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தோம் ஓரளவு நல்ல சமிக்கை காட்டப்பட்ட நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருடியால் பல ஸ்தாபனங்கள் மூடப்படும் நிலையில் இந்த முயற்சியும் நிறைவேறாதோ என்ற கவலை எம்மிடமுள்ளது. வருமான விடயங்களை கவனத்தில் கொள்ளும் அதிகாரிகள் வரிப்பணம் செலுத்தும் மக்கள் நலனை மறந்து விடுகின்றார்கள். எது எவ்வாறாகினும் அந்த கிராம மக்களுக்கான தபால் சேவையை உரிய துறையினர் வசதியான முறையில் வழங்க வேண்டுமென நாங்கள் வற்புறுத்தி கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் இயற்கை வளம், எழில் நிறைந்த இப்பிரதேசத்திற்கு சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கை பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இயற்கை சமநிலை பாதிக்கப்படுகின்றது. அத்துடன் இப்பிரதேசங்களில் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் கசிப்பு, மதுபான உற்பத்தியும் பயன்பாடும் இப்பகுதி மக்களிடையே சமூக பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. சிறுவர் துஸ்பிரயோகம், குடும்ப பிரிவுகள், கொலை? கொள்ளை, தற்கொலை சம்பவங்களுக்கும் வழியமைத்து எதிர்கால சந்தியை ஆபத்தின் எல்லைக்கு தள்ளிவிட்டுள்ளது. இவ்விடயத்தை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ பாதுகாப்பு தரப்பு தொடக்கம் உள்ளுர் அமைப்பின் பிரதிநிகளும் தவறியுள்ளனர்.

நாம் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகி இன்று இறுதியான அறுபதாவது சபை அமர்வில் கலந்து விடைபெற இருக்கின்றோம். நாம் கடந்து வந்த காலப்பகுதி மிகவும் சவால் மிக்கதாகவே அமைந்திருந்தது. கொவிட் தாக்கம் மற்றும் தற்போது ஏட்பட்டுள்ள பொருளாதார வங்குரோத்து நிலை எமது சில முயற்சிகளுக்கு தடையாக இருந்தது. எமது காலப்பகுதியில் திட்டமிட்ட பல விடயங்களை நிறைவேற்ற முடியவில்லை என்கின்ற கவலை உள்ளது அதே வேளை எமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு எம்மை அர்பணித்து பல சேவைகளை செய்திருக்கின்றோம். ஒரு சந்தர்பத்திலும் ஊழல் செய்யவில்லை எமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தையும் பொறுப்புக்களையும் உதாசீனம் செய்யவும் இல்லை இது குறித்து பெருமை கொள்கின்றோம். பதவிகளிலிருந்து விலகிய போதிலும் எமது சமூகத்திற்கான பணிகளிலிருந்து விலகமாட்டோம். எமது பணிகள் தொடரும் என்றார்.

Recommended For You

About the Author: webeditor