ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

குற்றச்சாட்டுகள் எவையுமற்ற அற்ற முன்மாதிரியானவராகவும் இலங்கை பொலிஸார் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தக்கூடியவராகவும் அடுத்த பொலிஸ்மா அதிபர் இருக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி வெற்றிடமாகவுள்ள பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மிகவும் பொருத்தமான நபரை நியமிப்பது மிகவும் முக்கியமானது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி கடந்த தசாப்தத்தில் சுதந்திரமின்மை, அரசியல் தலையீடு, அடக்குமுறை, கொலைகள், தொழில் திறன் இன்மை போன்ற விடயங்கள் பொலிஸார் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை இழக்கச்செய்துள்ளதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் நிர்வாகம், சட்டத்தை பாதுகாத்தல் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் மீது நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுவது அவசியம் என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணிகள் சங்கம், குற்றவியல் வழக்குகள் உள்ள நபர் அல்லது சட்டத்திற்கு புறம்பான விடயங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனைய தலைவர்களின் நியமனங்களும் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor