தமிழர் தாயகமெங்கும் திட்டமிட்ட முறையில் பௌத்தமயமாக்கல் இடம்பெற்ற வண்ணமுள்ளது, இதனை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இளைஞர் அணித் தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, தமிழர்களுக்கெதிராக இனப்படுகொலையை நடாத்தி அதில் பல லட்சக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த பிறகும் தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள ஆட்சியாளர்கள் பௌத்தமயமாக்கலையும் ஆக்கிரமிப்புக்களையும் நிகழ்த்தி வருகின்றார்கள்.
கலாசார மையமாக இருக்கின்ற யாழ்ப்பாணம் மண்ணிலே நாவற்குழிப் பிரதேசத்திலே சிங்கள மக்கள் எவரும் இல்லாத போதும் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புச் சின்னமாகப் பௌத்த விகாரையை அமைத்துள்ளார்கள்.
இன்றைய தினம் இந்த விகாரையின் அங்குராற்பண நிகழ்விற்கு தமிழருக்கெதிராக யுத்தத்தை மேற்கொண்டு இனப்படுகொலையைப் புரிந்த சவேந்திர சில்வா வருகை தந்திருக்கும் நிலையில் அவருக்கெதிராக நாங்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தினூடாக நாங்கள் தமிழினப் படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத் வேண்டும் , தமிழினப் படுகாலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலியுறுத்துவதுடன் சர்வதேசத் தலையீட்டினூடாக தமிழர் தாயகப் பரப்பில் நடக்கின்ற சிங்களமயமாக்கலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.
தற்பாழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கும் இவ் விடயங்களைக் கொண்டுவர இருக்கின்றோம். நெடுந்தீவு , வெடுக்குநாறி மலை , திருகோணமலை மற்றும் குருந்தூர் மலை போன்ற இடங்களோடு தமிழர் தாயகமெங்கும் திட்டமிட்டமிட்ட முறையில் நுணுக்கமான முறையில் பௌத்தமயமாக்கல் இடம்பெற்றவண்ணமுள்ளது.
இதனை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும் என்பதுடன் இதற்கெதிராக சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை மேற்கொள்ள வேண்டும்- என இன்னாசிமுத்து சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.