நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவினை தொடர்ந்து கடந்த காலங்களில் முட்டைகளின் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டன.
இந்நிலையில் அரசாங்கம் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையினை அறிவித்ததனை தொடர்ந்து ஹட்டன் ,மன்ராசி, பசுமலை, அக்கரபத்தனை, டயகம, உள்ளிட்ட பல நகரங்களில் பாரிய அளவில் முட்டை தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தற்போது முட்டையின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிக விலைக்கு கூட முட்டையினை பெற முடியாத நிலை காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். முட்டை தட்டுப்பாடு காரணமாக பல அசைவ ஹோட்டல்கள் சைவ ஹோட்டல்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும், முட்டையுடனான உணவு தயாரிப்புக்கள் குறைவடைந்துள்ளதானால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதே நேரம் பேக்கரி உற்பத்திகளும் முட்டையில்லாததன் காரணமாக பல உணவு தயாரிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டு பேக்கரியினை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேநேரம் முட்டை வியாபாரிகள் அதிக விலைக்கு முட்டையினை கடைகளுக்கு பெற்றுக்கொடுப்பதனால் முட்டையினை அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு விற்பனை செய்யும் போது விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் வந்து லட்ச கணக்கில் தண்டப்பணம் அறவிடுவதனால் முட்டை விற்பனை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும் எது எவ்வாறான போதிலும் மலையக மக்களின் போசாக்கான உணவாக தற்போது முட்டை மாத்திரமே காணப்படுகின்றன. போசாக்கு பற்றுக்குறை காரணமாக எதிர்காலத்தில் மலையக பகுதியில் வசிக்கும் சிறார்கள் பாரிய அளவில் பாதிக்கப்படலாம்,
இதனால் கல்வி சுகாதாரம்,உள்ளிட்ட விடயங்களில் பாதிப்பு ஏற்படலாம் எனவே இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் என்ற வகையில் பொது மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுத்து நியாயமான விலையில் முட்டையினை பெற்றுக்கொள்வதற்கு வழி செய்ய வேண்டும் என பலரும் தெரிவித்தனர்.