இலங்கையில் இன்றைய தினம் (01-03-2023) துறைமுகம், மின்சாரம், எரிபொருள், மருத்துவம் மற்றும் வங்கித்துறை உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடும் 40 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் வரிச் சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக, குறித்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
எனினும், துறைமுகம், விமான நிலையம் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நேற்று முன்தினம் (27-02-2023) இரவு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பல தொழிற்சங்கங்கள் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் படி, துறைமுகத்திலிருந்து உணவுப் பொருள் அல்லது பானம், நிலக்கரி, எரிபொருள் என்பவற்றுள் எவற்றையும் வெளியேற்றுதல், கொண்டுசெல்லல், தரையிறக்குதல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் அகற்றுதல் ஆகிய சேவைகளுக்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சேவைகளுக்காக, தெருக்கள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொடருந்து மார்க்கங்கள் உள்ளிட்டவை மூலமான போக்குவரத்து துறைக்கான வசதிகளை வழங்குதலும் பேணுதலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.