வடக்கு கிழக்கு மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை தெற்கில் உள்ள சமூகத்திற்கு தெரிய படுத்த முனையும் வசந்த முதலிகே

இலங்கையில் பயங்கரவாதச் சட்டத்தினால் வடக்கு, கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்து வரும் பிரச்சினைகளை தெற்கில் உள்ள சமூகத்திற்கு தெரியப்படுத்தி அந்த சட்டத்தை இல்லாதொழிக்க பாரிய தலையீடு மேற்கொள்ளப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

அதன்படி பயங்கரவாதச் சட்டத்தை ஒழிக்க வேண்டும், திருத்தங்கள் வேண்டாம், மாற்றீடுகளும் வேண்டாம் என்ற தொனிப்பொருளின் கீழ் இலங்கை மன்றக் கல்லூரியில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இந்தச் சட்டமூலம் தொடர்பில் தெற்கில் உள்ள சமூகத்திடம் தீவிரமான கலந்துரையாடல் எதுவும் இல்லை. வடக்கு சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், கிழக்கு சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தெற்கில் உள்ள சமூகத்திற்கு எடுத்து வருவோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு தொடர்ச்சியான பாரிய தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.

2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18ஆம் திகதி மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்டு திரும்பும் போது கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 5 மாதங்கள் விளக்கமறியலில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டேன்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பது குறித்த அணுகுமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதன்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பெயரை புதிய பெயரில் நடைமுறைப்படுத்த இடமளிக்கப்படமாட்டாது.

இந்த சட்டத்தின் பெயரை மாற்றி அதனை முன்கொண்டு செல்ல திட்டமிடும் அரசாங்கத்திற்கு ஒன்றைக் கூற வேண்டும். இதனை வேறு பெயரில், பின்கதவால் கொண்டுச் செல்ல இயலாது. எனவே நிச்சயமாக இதை இல்லாதொழிக்க வேண்டும்.

இந்த மிலேச்சத்தனமான சட்டத்தை ஒழிப்பதற்கு பல்வேறு வழிகளிலும் தொடர்ச்சியான தலையீட்டை நாங்கள் மேற்கொள்வோம்.” என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

Recommended For You

About the Author: webeditor