இந்திய உத்தர பிரதேச வாரணாசி மாநிலத்தில் ஒரே ஊசியில் பச்சை குத்தி கொண்டதில்14 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றி பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் மருத்துவர் பிரீதி அகர்வால் கூறும்போது, “பராகாவன் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் மற்றும் நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் உட்பட 14 பேர் குறைந்த விலையில் பச்சை குத்தி கொண்டதில் அவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
அதாவது அவர்களுக்கு மலேரியா காய்ச்சல் உட்பட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், எந்த பயனும் இல்லை. காய்ச்சல் குறையவே இல்லை. முடிவில், எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது, அதில் தொற்று இருப்பது அனைவருக்கும் உறுதியானது. இவர்களில் ஒருவருக்கும் பாலியல் ரீதியிலான தொடர்பிலோ அல்லது தொற்று ஏற்பட்டவரின் இரத்தம் வழியேவோ பாதிப்பு ஏற்படவில்லை என மருத்துவர் கூறியுள்ளார்.
அத்தோடு அண்மையில் அவர்கள் அனைவரும் பச்சை குத்தி கொண்டனர். அவர்களுக்கு பச்சை குத்திய நபர், ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்தியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் இந்த ஊசிகள் விலை உயர்ந்தவை. அதனால், பணம் மிச்சப்பட வேண்டும் என்பதற்காக பச்சை குத்துபவர்கள் ஒரே ஊசியை பயன்படுத்துவது வழக்கம். எப்போதும் பச்சை குத்தி கொள்பவர்கள், அது நல்ல தரமுள்ள நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய ஊசியா என சோதனை செய்து கொள்ள வேண்டும்” என மருத்துவர் பிரீதி அறிவுறுத்தியுள்ளார்.