பிரேசிலின் சிறந்த ஜியு ஜிட்சு சாம்பியன்களில் ஒருவரான லியாண்ட்ரோ லோ இரவு விடுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்துள்ளார்.
சாவோ பாலோவில் உள்ள இரவு விடுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 33 வயதான லோ பணியில் இல்லாத பொலிஸ் அதிகாரி ஒருவரால் தலையில் சுடப்பட்ட நிலையில் குற்றுயிராக மீட்கப்பட்டுள்ளார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் சில மணி நேரங்களில் மூளைச்சாவடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலக சாம்பியன்ஷிப்பை எட்டு முறை வென்றுள்ள லோ, மிகவும் வெற்றிகரமான ஜியு ஜிட்சு விளையாட்டு வீரர்களில் ஒருவராக விளங்கினார். சம்பவத்தின் போது பணியில் இல்லாத பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் லோவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி துப்பாக்கியை எடுத்து, லோவின் நெற்றிப்பொட்டில் சுட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தற்போது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மாயமாகியுள்ள அந்த பொலிஸ் அதிகாரியை தேடி வருவதாகவும் கூறுகின்றனர்.