தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து பாதுகாக்கும் சமஷ்டி அரசியலமைப்புக்கும் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்காக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயமொன்றை ஸ்தாபிப்பதற்கும் அமெரிக்காவின் ஆதரவை வலியுறுத்தி அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் அம்மையார் அவர்களின் இலங்கைக்கான வருகையை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் (கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் தலைவர் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) அவருக்கு (நுலாண்ட் அம்மையார் ) அனுப்பப்பட்ட கடிதம் வருமாறு:
விக்டோரியா நுலாண்ட் அம்மையார்
அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணைச் செயலாளர்
01 – 02 – 2023
தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து பாதுகாக்கும் சமஷ்டி அரசியலமைப்புக்கும் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்காக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயமொன்றை ஸ்தாபிப்பதற்கும் அமெரிக்காவின் ஆதரவை வலியுறுத்தல்.
பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர், இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான நேரத்தில் உங்களின் இலங்கை வருகை முக்கியமானது. ஏனெனில், சுதந்திரமடைந்த காலத்தைப் போலவே, தற்போதும் இலங்கை புதிதாகத் தனது வரலாற்றை தொடக்கவேண்டியுள்ளமையே அந்த முக்கியத்துவத்திற்கு காரணமாகும். பொதுவாக கடந்த 75 ஆண்டு கால கொள்கைகளும், குறிப்பாக தீர்க்கப்படாத இனப்பிரச்சினையும் இலங்கையை இன்றைய நிலைக்கு கொண்டுவந்துள்ளது.
எனவே, எதிர்காலம் கணிசமாக சிறப்பாக இருக்க வேண்டுமானால், கொள்கைகள் கணிசமாக வித்தியாசமாக இருக்க வேண்டும். இலங்கையின் தெற்கில் அண்மைக்காலமாக இடம்பெற்ற மக்கள் எழுச்சிகள் முழுமையான “அரச முறைமை மாற்றத்திற்கு” தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருவது இனிமேலும் இதனைச் சாதாரணமானதாக கடந்துசெல்வது இனியொரு தெரிவாக இல்லை என்பதைக் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஒற்றையாட்சிக் கட்டமைப்பாகும். இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, அரசின் கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரை, அர்த்தமுள்ள தன்னாட்சி மற்றும் சுயாட்சி அரசோ அடைய முடியாது என்ற அடிப்படையில் தமிழர்கள் அதை நிராகரித்து வருகின்றனர்.
13 ஆவது திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தை விட நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அரச கட்டமைப்பு ஒற்றையாட்சியாக இருக்கும் வரை, கொழும்பில் உள்ள அரசாங்கம் அனைத்து அதிகாரங்களின் உயர் பீடமாக இருக்கும் என்றும் குறிப்பாக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளமுடியாது என்றும் நாட்டின் உயர் நீதிமன்றங்களின் 30 க்கும் மேற்பட்ட நீதித்துறை தீர்ப்புகள் கூறுகின்றன.
தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வின் அடிப்படையாக 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் கோரிக்கை விடுத்து வருகின்றது. ஆனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பல்வேறு சரத்துக்களை அமுல்படுத்துமாறு கோரி உயர் நீதிமன்றங்களை அணுகிய போதெல்லாம் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மேற்குறிப்பிட்டவாறே இருந்துவருகின்றது.
இலங்கை உச்ச நீதிமன்றமே, இலங்கை அரசியலமைப்பு தொடர்பாக முடிவான தீர்ப்புகளை வழங்கும் என்பதாலும், அந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானவையாகவே இருப்பதாலும், இன்று 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் விதமானது, உண்மையில் 13 ஆவது திருத்தம் முழுமையாக அதேவகையில் அமுல்படுத்தப்படுவதே தவிர, அதன் ஊடாக புதிய அதிகாரங்களை நடைமுறைக்கு கொண்டுவர முடியாது என்பதை மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
13 ஆவது திருத்தச் சட்டத்தை பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாக தமிழர்கள் கருதுவது கூடுதல் அரசியல் அபாயமாகும். அதாவது எமது வரலாற்றில் முதல் தடவையாக தமிழர்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வதாகவே இருக்கும்.
13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதால், இலங்கையில் இனப்பிரச்சினை இனி இல்லை என்ற சட்ட நிலைப்பாட்டை இலங்கை அரசு கையில் எடுக்கும் உண்மையான ஆபத்தை இத்தகைய நடவடிக்கை எடுக்கிறது. இதன் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பான எதிர்கால பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது தடுக்கப்படும்.
இக்காரணங்களினால்தான் 13 ஆவது திருத்தச் சட்டத்தை பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட எமது அமைப்பு ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், பேச்சுவார்த்தைகள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கவேண்டுமானால், ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்கு அப்பால் சென்று, நாட்டின் ஒற்றுமையை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்துகின்ற வகையில், சமஷ்டிக் கட்டமைப்பைப் பரிசீலிப்பதன் மூலமே தீர்வை அடைய முடியும் என்பதை சிங்கள தேசத்தின் தலைவர்கள் பகிரங்கமாகக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.
1985 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தின் அனுசரணையில் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது, தமிழர்கள் ஒற்றுமையாக பிரகடனப்படுத்திய திம்பு கொள்கைகளில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கைகளை எமது அமைப்பு சரியானதாக நம்புகின்றது.
அதனடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ரமேஷ் டி சில்வா தலைமையிலான நிபுணர்கள் குழுவிடம் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு எமது அமைப்பிடம் கேட்கப்பட்ட போது, திம்பு கொள்கைகளின் அடிப்படையில் எமது முன்மொழிவுகளை சமர்ப்பித்தோம்.
சுருக்கமாகச் சொல்வதானால், சிங்கள தேசத்தையும் தமிழ்த் தேசத்தையும் அதன் தனித்துவமான இறையாண்மைகளையும் அங்கீகரித்த சமஷ்டிக் கட்டமைப்பிற்கான முன்மொழிவுகள் ஐக்கிய இலங்கை அரசிற்குள் இருந்தன.
வடகிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் மற்றும் இலங்கையில் மலையக தமிழ் மக்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவுகள் கடந்த 75 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலிலும் தமிழர்கள் வழங்கிய மகத்தான தேர்தல் ஆணைகளுடன் முற்றிலும் ஒத்துப்போகின்றன.
ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்குள் எந்தவொரு தீர்வுக்கான யோசனைகளையும் நிராகரிக்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்குமாறும், அதற்குப் பதிலாக தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து பாதுகாக்கும் மற்றும் தமிழ் மக்களின் பிரிக்க முடியாத சுயநிர்ணய உரிமையை அடைய அனுமதிக்கும் இலங்கைக்கான சமஷ்டி அரசியலமைப்பை ஆதரிக்குமாறும் எமது அமைப்பு அமெரிக்க அரசாங்கத்தை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவையுடன், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களின் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் என்பது தமிழ் மக்களுக்கு மீள அத்தகைய பேரவலம் நிகழாமல் இருப்பதற்கு அடிப்படையானதாகும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்ற வகையில், தமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக் குற்றம் உட்பட மனிதகுலம் அறிந்த மிக மோசமான குற்றங்கள் என்று நம்புகின்றனர். பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச அழைப்பை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது.
எவ்வாறெனினும் இந்த முயற்சிகள் பெரும்பாலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முதலாவது அமெரிக்க அனுசரணையிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இலங்கை அரசு ஒருபோதும் பொறுப்புக்கூறலை மனமுவந்து நிறைவேற்றாது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளது.
இது ஐ.நா மனித உரிமைகள் பேரவையை ஒரு பயனற்ற மன்றமாக ஆக்குகிறது. பொறுப்புக்கூறல் நடைமுறைக்கு வரவேண்டுமானால், அது சர்வதேச நீதிமன்றம், ஐ.சி.சி.க்கு இலங்கையை பரிந்துரை செய்வதன் மூலமோ அல்லது சர்வதேச தற்காலிக குற்றவியல் தீர்ப்பாயத்தை அமைப்பதன் மூலமோ இருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்தாகும்.
இலங்கைக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு தேவைப்படும் வேளையில், மேற்குறிப்பிட்ட எமது வாதத்தின் அடிப்படையில் அமெரிக்க அரசாங்கம் தனது ஆதரவை நிபந்தனைக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
நன்றி.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி