முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க மக்களிடம் விடுத்துள்ள மன்னிப்பு கோரலை நிராகரிப்பதாக கொழும்பு பேராயரின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அருட்தந்தை ஜூன் பிரியந்த தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மன்னிப்பு கோர வேண்டுமாயின் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்து மன்னிப்பு கோரியிருக்க வேண்டும் எனவும், தாக்குதல் இடம்பெற்று ஆண்டுகள் கழிந்த பின்னர் ஊடகங்களில் கண்காட்சி நடாத்துவதனை ஏற்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க மக்களின் ஆதரவு
கத்தோலிக்க மக்கள் தனக்கு ஆதரவளிப்பதாக மைத்திரி கூறியுள்ளதாகவும், இது உண்மையென்றால் கொச்சிக்கடை, கடுவாப்பிட்டி, நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு சென்று இதனை நிரூபிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களில் வெளியிடும் கருத்துக்களை பார்க்கும் போது வழக்குத் தீர்ப்பினை உரிய முறையில் வாசிக்கவில்லை என தெரிகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதல் பற்றி புலனாய்வுப் பிரிவு அறிந்திருந்தும் அதனை ஜனாதிபதிக்கு சொல்லவில்லை என்றால் அது ஜனாதிபதியை கணக்கில் எடுக்காத நிலைமையாகும் எனவும் இது குறித்து தேடிப்பார்க்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
நட்டஈடு
வடக்கில் இடம்பெற்ற போரின் போதான தாக்குதல்களையும் ஈஸ்டர் தாக்குதலையும் ஒன்றாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் மூலம் அனைவரும் பாதிக்கப்பட்டனர் எனவும், மைத்திரி கத்தோலிக்க மக்களிடம் மட்டும் மன்னிப்பு கோரக்கூடாது எனவும், அனைவரிடமும் மன்னிப்பு கோர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
நட்டஈடு செலுத்த முடியாது என மைத்திரி கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அருட்தந்தை ஜூட் பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நெருங்கும் போது வெளியிடப்படும் இவ்வாறான கூற்றுக்கள் பற்றி மக்கள் நன்கு அறிவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.