உயர்தரப்பரீட்சைக்காக தந்தையுடன் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் மீது அமில வீச்சு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கேகாலை பரகம்மன பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அமிலவீச்சுக்கு இலக்கான மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவம்
பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞரொருவர் உந்துருளியில் வந்து மாணவி மீது அமிலம் வீச முற்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடுமாகம பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தந்தையுடன் முச்சக்கர வண்டியில் கேகாலை நகரில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது குறித்த முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்த மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞர் நண்பர்களுடன் உந்துருளியில் வந்து வீதியை மறித்து முச்சக்கரவண்டியின் பின்னால் இருந்த பாடசாலை மாணவியின் கழுத்தை நெரித்து அமிலம் வீச முற்பட்டுள்ளார்.
இதன்போது மாணவியின் தந்தை அமில போத்தலை பறித்து இளைஞன் மீது வீச முற்பட்ட சமயத்தில் மாணவி, அவரது தந்தை மற்றும் இளைஞர் தீக்காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் கேகாலை – ஹெட்டிமுல்ல, உடுமாகம பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும், அவரது 45 வயதுடைய தந்தையும், கேகாலை நகரில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கேகாலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.